சிங்காநல்லூர் குளக்கரையில் எறும்புகள் கணக்கெடுப்பு - 3 வாரங்களில் 20 வகை கண்டுபிடிப்பு

சிங்காநல்லூர் குளக்கரையில் எறும்புகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இதில், 3 வாரங்களில் 20 வகையான எறும்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

Update: 2019-07-28 22:00 GMT
கோவை,

கோவை மாநகர பகுதியில் 8 குளங்கள் இருந்தாலும், சிங்காநல்லூர் குளத்துக்கு தனி சிறப்பு உண்டு. 288 ஏக்கரில் அமைந்துள்ள இந்த குளம் கடந்த 2017-ம் ஆண்டில் நகர்ப்புற பல்லுயிர் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப் பட்டது.

எனவே நகர்ப்புற பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் கல்வி மையம் (கியூப்) சார்பில் வாரத்தில் 3 நாட்கள் பள்ளி மாணவர்களை குளக்கரைக்கு அழைத்து சென்று அங்குள்ள தாவரங்கள் மற்றும் அவற்றின் பயன்கள் குறித்து கற்றுக்கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும் இங்கு வனமரபியல் ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வில் 453 வகையான தாவரங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

பொதுவாக தாவரங்கள் அதிகமாக இருக்கும் இடத்தில் பூச்சியினங்கள் அதிகளவில் இருக்கும். அதிலும் சிங்காநல்லூர் குளக்கரையில் பல்வேறு வகையான எறும்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டன. எனவே அங்கு இருக்கும் எறும்புகள் குறித்து கணக்கெடுக்க தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் முடிவு செய்தனர்.

இதற்கு மாநகராட்சியும் அனுமதி அளித்தது. இதனால் அங்கு வாரந்தோறும் சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் எறும்புகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. இது, 3 மாதங்கள் நடக்கும். கணக்கெடுப்பு முடிந்ததும், அங்கு இருக்கும் எறும்பு வகைகள் குறித்து மாநகராட்சிக்கும், வனமரபியல் ஆராய்ச்சி மையத்துக்கும் அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது.

இது குறித்து எறும்புகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுபவர்கள் கூறியதாவது:-

சிங்காநல்லூர் குளக்கரையில் கடந்த 13-ந் தேதி எறும்புகள் கணக்கெடுப்பு தொடங்கியது. மைக்ரோ கேமரா மற்றும் சிறிய எறும்புகளை கூட கண்டுபிடிக்கக்கூடிய நவீன கருவிகள் மூலம் கணக்கெடுப்பு நடத்தி வருகிறோம். 3 வாரங்கள் 20 வகையான எறும்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

அதில் கட்டெறும்பு, சிவப்பு எறும்பு, மொசாடு, சாமி எறும்பு, சிற்றெறும்பு, பெரிய சிற்றெறும்பு உள்பட 10 வகையான எறும்புகள் அடையாளம் காணப்பட்டு உள்ளன. மீதமுள்ள 10 வகையான எறும்புகள் எந்த வகை என்பதை கண்டுபிடித்து விட்டோம். ஆனால் அதன் பெயர் தெரியவில்லை. அது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்