தீபாவளி சீட்டு நடத்தி மோசடி, வீட்டை காலி செய்ய லாரியுடன் வந்த தந்தை-மகனை பொதுமக்கள் திடீர் முற்றுகை - கடலூரில் பரபரப்பு

தீபாவளி சீட்டு நடத்தி மோசடி செய்த வழக்கில் கைதானவர் அவருடைய மகனுடன் லாரியில் வீட்டை காலி செய்வதற்காக வந்தபோது பொதுமக்கள் அவர்களை திடீரென முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-07-28 22:30 GMT
கடலூர்,

கடலூர் மஞ்சக்குப்பம் திருமலைநகரை சேர்ந்தவர் சின்னதம்பி(வயது 54). இவருடைய மனைவி இந்திரவாணி. தீபாவளி சீட்டு நடத்தி மோடி செய்தது தொடர்பான வழக்கில் கணவன், மனைவி இருவரையும் கடலூர் புதுநகர் போலீசார் கைது செய்து அவர்கள் மீது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். பின்னர் கோர்ட்டு உத்தரவின் பேரில் ஜாமீனில் வெளியே வந்த இவர்கள், குடும்பத்துடன் பெங்களூருவில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடலூர் மஞ்சக்குப்பம் திருமலைநகரில் உள்ள வீட்டை காலி செய்ய சின்னதம்பி முடிவுசெய்தார். இதற்காக நேற்று அவர் தனது மகன் இளவரசனுடன் லாரியில் கடலூருக்கு வந்தார்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் அந்த பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தந்தை-மகன் இருவரையும் திடீரென முற்றுகையிட்டனர்.

எங்களுக்கு பணம் தராமல் வீட்டில் உள்ள பொருட்களை எடுத்து செல்ல அனுமதிக்கமாட்டோம் என எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்த தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சீட்டு நடத்தி பணம் மோசடி செய்தது தொடர்பான வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

எனவே கோர்ட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் என்று கூறினர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

பின்னர் சின்னதம்பியை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று சிறிது நேரம் விசாரணை நடத்தி விட்டு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்