குற்றாலத்தில் பரிதாபம் சிற்றருவியில் குளித்த கர்ப்பிணி திடீர் சாவு
குற்றாலம் சிற்றருவியில் குளித்த கர்ப்பிணி திடீரென பரிதாபமாக இறந்தார்.
தென்காசி,
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவருடைய மனைவி காளஸ்வரி (வயது 20). இவர் தற்போது 6 மாத கர்ப்பிணியாக இருந்தார். கணவன்- மனைவி இருவரும் நேற்று குற்றாலத்துக்கு குளிக்க வந்தனர்.
மாலையில் சிற்றருவியில் கணவன்- மனைவி குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது காளஸ்வரிக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் அங்கேயே அவர் மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு டாக்டர்கள் அவரை பரிசோதனை செய்த பார்த்தபோது, காளஸ்வரி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் குற்றாலம் போலீசார் ஆஸ்பத்திரிக்கு வந்தனர். அவரது உடலை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து குற்றாலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியிலும், அவரது உறவினர்கள் இடையேயும் பெருத்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.