மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: மீன்பிடி தொழிலுக்கு தயாராகும் மீனவர்கள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக மீன்பிடி தொழிலுக்கு மீனவர்கள் தயாராகி வருகின்றனர்.

Update: 2019-07-28 22:00 GMT
கொளத்தூர், 

மேட்டூர் அணை நீர் தேக்கப்பகுதிகளில் மீன் பிடிப்பதற்காக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடி உரிமம் பெற்றுள்ளனர். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்து போனதாலும், கர்நாடகா, தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறந்து விட மறுத்ததாலும் மேட்டூர் அணையில் நீர்வரத்து மிகவும் குறைந்து போவது வாடிக்கையாகி வருகிறது.

இதனால் ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணையை வாழ்வாதாரமாக கொண்டுள்ள மீனவர்கள் வறுமை நிலைக்கு தள்ளப்படுவதும் வாடிக்கையாக உள்ளது. மீன்பிடி தொழில் இல்லாததால் மீனவர்கள் வேலை தேடி பிற மாவட்டங்களுக்கு இடம் பெயர்வதும், கட்டுமான தொழில் போன்ற இதர தொழில்களுக்கு செல்வதுமாக உள்ளனர்.

இந்த நிலையில் நடப்பாண்டிலும் பருவ மழை பொய்த்து போனது. ஆனால் கர்நாடக காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையினால் கர்நாடக அணைகளில் இருந்து மேட்டூர் அணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இந்த நீர் வரத்தின் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து கொண்டே வருகிறது.

இதனை தொடர்ந்து மேட்டூர் அணையில் மீன்வளம் அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மீன் பிடி தொழிலுக்கு மீனவர்கள் தயாராகி வருகின்றனர். இதற்காக பண்ணவாடி உள்ளிட்ட பகுதிகளில் புதிய மீன்பிடி வலைகளை தயார் செய்வதிலும், பிளாஸ்டிக் பரிசல்கள் வாங்குவதிலும் ஈடுபட்டு உள்ளனர். நடப்பாண்டிலாவது மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்ந்து மீன் வளம் அதிகரித்து தங்களது வாழ்வாதாரம் செம்மைப்படும் என்ற நோக்கத்தில் மீன்பிடி தொழிலுக்கான உபகரணங்களை வாங்குவதில் மீனவர்கள் மும்முரம் காட்டி வருகின்றனர்.

மேலும் செய்திகள்