நீர்வரத்து குறைந்ததால் ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள் அருவியில் உற்சாக குளியல்

காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்ததால் நேற்று ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் மெயின் அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

Update: 2019-07-28 22:00 GMT
பென்னாகரம், 

கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் கேரளா மாநிலம் வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகள் நிரம்பி வருகின்றன. இதன் காரணமாக 2 அணைகளில் இருந்தும் காவிரி ஆற்றில் தண்ணீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை அளவு குறைந்ததால் அங்குள்ள அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பது வினாடிக்கு 13 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.

இதனால் தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டது. இதனிடையே நேற்று முன்தினம் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 9,500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்து நேற்று மாலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 9 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. காவிரி ஆற்றில் வரும் தண்ணீரின் அளவை கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளவீடு செய்து கண்காணித்தனர். ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைந்த போதும் பரிசல் இயக்க விதிக்கப்பட்ட தடை நேற்று 6-வது நாளாக நீடித்தது.

இதனிடையே நேற்று வாரவிடுமுறை என்பதால் கர்நாடகா, கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஒகேனக்கல்லுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். அவர்கள் மெயின் அருவி மற்றும் காவிரி ஆற்றின் கரையோரம் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். மேலும் காவிரி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர் மற்றும் அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரை அவர்கள் கண்டு ரசித்தனர்.

ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்தனர். நேற்று ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் போலீசார், ஊர்க்காவல் படையினர் தீவிர ரோந்து சென்று கண்காணித்தனர்.

மேலும் செய்திகள்