சிறுபான்மையின மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் ஆசியா மரியம் தகவல்
சிறுபான்மையின மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஆசியா மரியம் தெரிவித்து உள்ளார்.
நாமக்கல்,
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டு உள்ள இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி மற்றும் ஜைன மதத்தை சார்ந்த அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுதோறும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி 2019-20-ம் கல்வியாண்டில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகையும், 11-ம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை பயில்பவர்களுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகையும், தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வி பயில்பவர்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகையும் வழங்கப்பட உள்ளது. இந்த உதவித்தொகை பெறுவதற்கு மத்திய அரசின் www.sch-o-l-a-rs-h-ips.gov.in என்ற தேசிய கல்வி உதவித்தொகை இணைய தளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
2019-20-ம் கல்வியாண்டில் தமிழ்நாட்டில் இந்த கல்வி உதவித்தொகை திட்டங்களின் கீழ் 1,35,127 மாணவ, மாணவிகளுக்கு புதிய கல்வி உதவித்தொகை வழங்க மத்திய அரசால் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுஉள்ளது. இக்கல்வி உதவித்தொகை மாணவ,மாணவிகளின் வங்கி கணக்கில் மத்திய அரசால் நேரடியாக செலுத்தப்படும்.
பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு தகுதியான மாணவ, மாணவிகள் அக்டோபர் 10-ந் தேதி வரையிலும், பள்ளி மேற்படிப்பு திட்டம் மற்றும் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு அக்டோபர் மாதம் 31-ந் தேதி வரையிலும் இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
மாணவ, மாணவிகள் அனைவரும் இணையதளத்தில் கேட்கப்பட்டுஉள்ள அனைத்து விவரங்களையும், விடுபடாமல் பூர்த்தி செய்து விண்ணப்பத்தை படியிறக்கம் செய்து, அதனுடன் மாணவரது புகைப்படம் மற்றும் தேவையான அனைத்து ஆவணங்களின் நகல்களை இணைத்து குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் கல்வி நிலையத்தில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். ஆவண நகல்களை இணைத்து கல்வி நிலையத்திற்கு அனுப்பாத மாணவ, மாணவிகளின் இணையதள விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது. கல்வி நிலையங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்களை அவ்வப்போது உடனுக்குடன் பரிசீலித்து, விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டு உள்ள விவரங்களை சான்று ஆவணங்களுடன் சரிபார்த்து, தகுதி பெற்ற விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.