அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அனைத்து துறைகளிலும் சாதனை படைக்கிறார்கள்

அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் அனைத்து துறைகளிலும் சாதனை படைத்து வருகிறார்கள் என தேசிய ஆதிதிராவிடர் ஆணைய துணைத்தலைவர் முருகன் தெரிவித்தார்.;

Update:2019-07-29 04:30 IST
பரமத்திவேலூர்,

பரமத்திவேலூர் அருகே உள்ள கோனூர் அரசினர் மேல் நிலைப்பள்ளியில் ரூ.95 லட்சம் செலவில் கூடுதல் வகுப்பறை மற்றும் அறிவியல் ஆய்வகத்தை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக தேசிய ஆதி திராவிடர் ஆணைய துணைத்தலைவர் முருகன் கலந்து கொண்டு பேசியதாவது:-

முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் அப்துல்கலாம் கனவு காணுங்கள். அது ஒரு நாள் நனவாகும் என்றார். இதன் அடிப்படையில் கோனூர் என்ற சிறிய கிராமத்தில் பிறந்து அரசு பள்ளியில் படித்த நான் இந்த பொறுப்பு வகிப்பதில் பெறுமை அடைகிறேன். அப்துல்கலாம் பொக்ரான் அணு ஆராய்சி சோதனை செய்து நமது தேசத்தை அனைவரும் திரும்பி பார்க்க வைத்தார். குடியரசு தலைவராக பதவி வகித்தபோது தினந்தோறும் மாணவர்களிடம் உரையாடி, அவர்களை ஊக்கப்படுத்துவதையே முழு மூச்சாகக் கொண்டு செயல்பட்டார்.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் அரசு உண்டு, உறை விடப்பள்ளி மற்ற பள்ளிகளுக்கு முன்னுதாரமான பள்ளியாக செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் நீட், ஐ.ஐ.டி மற்றும் ஜிப்மர் மருத்துவ படிப்பு உள்ளிட்ட அனைத்து உயர் கல்விக்கான நுழைவுத்தேர்வுகளுக்கும் பயிற்சி அளித்து வருகின்றனர். அதேபோல் நமது மாநிலத்திலும் சர்வதேச தரத்திலான அரசு பள்ளிகளை உருவாக்க வேண்டும் என தமிழக முதல்-அமைச்சரிடம் கோரிக்கை வைத்தேன். அதன் அடிப்படையில் முதல்-அமைச்சர் ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் குழுக்கள் அமைத்து அப்பள்ளியை பார்வையிட உத்தரவிட்டார்.

தமிழகத்தில் தற்போது சர்வதேச பள்ளியை உருவாக்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. கோனூர் அரசினர் பள்ளியில் படித்த மாணவ, மாணவிகளில் பலர் டாக்டர்களாகவும், பொறியாளர்களாகவும், தொழில் அதிபர்களாகவும் உயர்ந்த நிலையை அடைந்து உள்ளனர். கடந்த ஆண்டு பிளஸ்-2 பொதுத்தேர்வில் இப்பள்ளி 99 சதவிகித தேர்ச்சி அடைந்து உள்ளது. பள்ளி மாணவி மகேஷ்வரி வேதியியல் பாடப்பிரிவில் 100-க்கு 100 மதிப்பெண் பெற்று பெறுமை சேர்த்துள்ளார்.

பிரதமரின் தூய்மை பாரத திட்டம் கடந்த 5 ஆண்டுகளாக மிகுந்த மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. மாணவர்களாகிய நீங்களும் தூய்மை காப்போம், தூய்மையை பேணுவோம் என உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும். இப்பள்ளியில் நீட் தேர்வு பயிற்சி மையம் அமைத்திட நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் அனைத்து துறைகளிலும் சாதனை படைத்து வருகிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

இதைத்தொடர்ந்து பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் சமுதாய பங்களிப்பு நிதி உதவி திட்டத்தின் கீழ் ரூ.95 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை மற்றும் அறிவியல் ஆய்வகம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டினார். விழாவில் நாமக்கல் சப்-கலெக்டர் கிராந்திகுமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், திருச்செங்கோடு உதவி கலெக்டர் மணிராஜ், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் மரகதவள்ளி, பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் பொது மேலாளர் ஷெனாய், மாவட்ட கல்வி அலுவலர் உதயகுமார், முன்னாள் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், ஆசிரியைகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்