ஓசூர் அருகே ஓடும் காரில் தீ; 10 பேர் உயிர் தப்பினர்
ஓசூர் அருகே ஓடும் கார் தீப்பிடித்து எரிந்த விபத்தில் 10 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.
ஓசூர்,
பெங்களூரு ஜே.பி. நகரை சேர்ந்தவர் சையத். இவர் மற்றும் குடும்பத்தினர் 10 பேர் நேற்று காலை பெங்களூருவில் இருந்து ஓசூர் நோக்கி காரில் வந்து கொண்டிருந்தனர். அவர்கள் வந்த கார் பெங்களூரு - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் ஓசூர் அருகே உள்ள கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளி மேம்பாலம் பக்கமாக சென்று கொண்டிருந்தது.
அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென்று காரின் என்ஜின் பகுதியில் இருந்து கரும்புகை வந்தது. இதனால் உடனடியாக காரை நிறுத்திய டிரைவர் கீழே இறங்கினார். மேலும் காரில் இருந்த அனைவரும் கீழே இறங்கினார்கள். சிறிது நேரத்தில் கார் மளமளவென்று தீப்பிடித்து எரிந்தது.
கார் தீப்பற்றி எரிந்த தகவல் அறிந்ததும் அத்திப்பள்ளி தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் கார் முழுமையாக எரிந்து சேதம் அடைந்தது. அதிர்ஷ்டவசமாக காரில் இருந்தவர்கள் உடனடியாக கீழே இறங்கியதால் 10 பேரும் காயமின்றி உயிர் தப்பினார்கள். இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து அத்திப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் காரணமாக பெங்களூரு - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.