பிற்படுத்தப்பட்டோருக்கு பொருளாதார மேம்பாட்டு கடன்உதவி பெற விண்ணப்பிக்கலாம்

பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழக கடன் உதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று அரியலூர் கலெக்டர் டி.ஜி.வினய் தெரிவித்துள்ளார்.

Update: 2019-07-28 22:15 GMT
அரியலூர்,

தமிழக அரசு சார்பில் பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் சார்பில் அரியலூர் மாவட்டத்தில் வசிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மக்களின் சமூக பொருளாதார நிலையினை மேம்படுத்தும் வகையில், கீழ்க்கண்டவாறு பல்வேறு கடன் உதவி திட்டங்களின் கீழ் நிதியுதவி வழங்கப்படவுள்ளது. நிதியுதவி அளிக்கப்படும் பல்வேறு தொழில்கள் விவரம் வருமாறு:-

சில்லரை வியாபாரம் மற்றும் சிறுதொழில்கள். விவசாயம், போக்குவரத்து, கைவினைஞர் மற்றும் மரபுவழிச் சார்ந்த தொழில்கள், இளம் தொழிற் பட்டதாரிகள் சுய தொழில், தொழிற்கல்வி பயிலுதல். சிறு தொழில், வியாபாரம் செய்ய தனி நபருக்கு பொது கடனுதவி வழங்கப்படுகிறது. அதிக பட்ச கடன் தொகையாக ரூ.15 லட்சம் வழங்கப்படுகிறது.

சுய உதவிக்குழுவில்...

பெண்களுக்கான கடன் வழங்கும் திட்டங்களில் சிறு கடன் வழங்கும் திட்டத்தின் (மகிளா சம்ரிதி யோஜனா) கீழ் சுய உதவிக்குழுவில் உறுப்பினர்களாக உள்ள மகளிருக்கு கடனுதவி வழங்கப்படுகிறது. ஒரு குழுவில் அதிகபட்சம் 20 உறுப்பினர்கள் அனுமதிக்கப்படுவர். சுய உதவிக் குழு தொடங்கி 6 மாதங்கள் பூர்த்தியாகி இருத்தல் வேண்டும். திட்ட அலுவலரால் (மகளிர் திட்டம்) தரம் பிரித்தல் செய்யப்பட்டிருக்க வேண்டும். அதிக பட்ச கடன் தொகையாக ரூ.1 லட்சம் வழங்கப்படுகிறது. புதிய பொற்காலத் திட்டத்தில் (மகளிருக்கான காலக் கடன் திட்டம்) அதிக பட்ச கடன் தொகையாக ரூ.2 லட்சம் வழங்கப்படுகிறது.

கடன் பெறுவதற்கான தகுதிகளாக பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் வகுப்பினராக இருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஆண்டொன்றுக்கு கிராமப்புறங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் ரூ.3 லட்சத்திற்கும் மிகாமல் இருக்க வேண்டும். வயது வரம்பு 18 வயதிற்கு மேல் 60 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ஒருவருக்கு மட்டுமே கடனுதவி

ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். மேலும் இந்த கடன் பெறுவதற்கான விண்ணப்பங்கள் இலவசமாக சென்னையில் உள்ள தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் தலைமை அலுவலகம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகங்கள் மற்றும் கூட்டுறவு கடன் சங்கங்கள், வங்கிகள் ஆகிய இடங்களில் வழங்கப்படுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட கடன் விண்ணப்பங்களை விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள உரிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகங்கள் மற்றும் கூட்டுறவு கடன் சங்கங்கள், வங்கிகளில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்