மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற சிறுபான்மையின மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்

மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு சிறுபான்மையின மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அரியலூர் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Update: 2019-07-28 23:00 GMT
அரியலூர்,

தமிழ்நாட்டில் மத்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர், புத்தமதத்தினர், பார்சி மற்றும் ஜைன மதத்தை சார்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மத்திய-மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2019-20 கல்வியாண்டில் 1-ம் வகுப்பு முதல் எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பிளஸ்-1 வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை (ஐ.டி.ஐ., ஐ.டி.சி., வாழ்க்கை தொழிற்கல்வி, பாலிடெக்னிக், செவிலியர், ஆசிரியர் பட்டயப்படிப்பு, இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள் உள்பட) பயில்பவர்களுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகையும் மற்றும் தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயில்பவர்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. அரியலூர் மாவட்டத்தில் வசிக்கும் சிறுபான்மையினத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள் இந்த கல்வி உதவித்தொகை பெறுவதற்கு மத்திய அரசின் www.sch-o-l-a-rs-h-ips.gov.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகின்றன.

வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்

இந்த கல்வி உதவித்தொகை மாணவ, மாணவிகளின் வங்கி கணக்கில் மத்திய அரசால் நேரடியாக செலுத்தப்படும். பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு தகுதியான மாணவ-மாணவிகள் வருகிற அக்டோபர் மாதம் 15-ந் தேதி வரையிலும், பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு தகுதியானவர்கள் அக்டோபர் மாதம் 31-ந் தேதி வரையிலும் மேற்படி இணைய தளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மாணவ-மாணவிகள் அனைவரும் இணைய தளத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் விடுபடாமல் பூர்த்தி செய்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனுடன் மாணவரது புகைப்படம் மற்றும் தேவையான அனைத்து ஆவணங்களின் நகல்களை இணைத்து குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் கல்வி நிலையத்தில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் இத்திட்டம் தொடர்பான மைய அரசால் வெளியிடப்பட்ட வழிகாட்டி நெறிமுறைகள் http://www.mi-n-o-r-itv-a-f-f-a-irs.gov.in/sch-e-mes/ என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்