தர்மபுரி மாவட்டத்தில் அப்துல்கலாம் நினைவு தினம் அனுசரிப்பு

தர்மபுரி மாவட்டத்தில் தனியார் பள்ளிகளில் அப்துல்கலாம் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

Update: 2019-07-28 22:30 GMT
தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி, ஸ்டான்லி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஸ்டான்லி கல்வி நிறுவனங்களின் தாளாளர் வி.முருகேசன் மற்றும் செயலாளர் எம்.பிரு ஆனந்த் பிரகாஷ் ஆகியோர் அப்துல்கலாம் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

மேலும் அப்துல்கலாமின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவருடைய பொதுத்தொண்டு, அவருடைய சாதனைகள் குறித்து மாணவ-மாணவிகளுக்கு விளக்கி கூறினர். இதில் மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டு அப்துல்கலாம் படத்திற்கு மலர் தூவினர்.

கடத்தூரில் உள்ள கிரீன் பார்க் இன்டர்நேஷனல் மற்றும் கிரீன்பார்க் மெட்ரிக் பள்ளியில் அப்துல்கலாம் நினைவுநாள் மற்றும் மாணவர் எழுச்சி நாள் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் நிர்வாக அலுவலர் எம்.ராஜா அப்துல்கலாம் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். மேலும் அப்துல்கலாமின் சாதனைகள் குறித்து மாணவ-மாணவிகளுக்கு விளக்கி பேசினார். அதைத்தொடர்ந்து மாணவ, மாணவிகள் உறுதிமொழி எடுத்து கொண்டனர். முடிவில் மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

காரிமங்கலத்தை அடுத்த கெரகோடஅள்ளியில் உள்ள தானப்பகவுண்டர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் அப்துல்கலாம் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் மல்லிகா அன்பழகன் தலைமை தாங்கி அப்துல் கலாம் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். பள்ளி முதன்மை நிர்வாக அலுவலர் வித்யா ரவிசங்கர் முன்னிலை வகித்தார்.

இதில் பள்ளி முதல்வர் ரஹிப்அகமது, பள்ளி நிர்வாக அலுவலர் தனபால் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் அப்துல் கலாம் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இதைத்தொடர்ந்து அப்துல்கலாம் உருவப்படம் பொறித்த நாணயத்தை போன்று கோலமிட்டு மாணவ, மாணவிகள் தங்களது அஞ்சலியை செலுத்தினர்.

மேலும் செய்திகள்