கர்நாடக சட்டசபையில் இன்று 100 சதவீதம் பெரும்பான்மையை நிரூபிப்பேன் எடியூரப்பா நம்பிக்கை

கர்நாடக சட்டசபையில் இன்று (திங்கட்கிழமை) 100 சதவீதம் பெரும்பான்மையை நிரூபிப்பேன் என்று எடியூரப்பா நம்பிக்கை தெரிவித்தார்.

Update: 2019-07-28 23:30 GMT
பெங்களூரு,

கர்நாடக முதல்-மந்திரியாக எடியூரப்பா கடந்த 27-ந் தேதி பதவி ஏற்றார். ஒரு வாரத்திற்குள் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி எடியூரப்பாவுக்கு கவர்னர் உத்தரவிட்டார். இந்த நிலையில் பதவி ஏற்ற பிறகு நிருபர்களுக்கு பேட்டியளித்த முதல்-மந்திரி எடியூரப்பா, 29-ந் தேதி (அதாவது இன்று) பெரும்பான்மையை நிரூபிப்பேன் என்று அறிவித்தார்.

இந்த நிலையில் கர்நாடக சட்டசபையின் 2 நாள் சிறப்பு கூட்டம் இன்று (திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு பெங்களூரு விதான சவுதாவில் தொடங்குகிறது. இந்த கூட்டம் தொடங்கியதும், நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கிறது. இதில் எடியூரப்பா அரசு வெற்றி பெறுவது உறுதி என்று தெரிகிறது. 17 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால், சட்டசபையின் பலம் 207 ஆக குறைந்துவிட்டது.

எடியூரப்பா அரசு பெரும்பான்மையை நிரூபிக்க 104 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. ஆனால் அக்கட்சிக்கு சுயேச்சை எம்.எல்.ஏ. நாகேசுடன் சேர்த்து 106 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளது. அதனால் எடியூரப்பா அரசு வெற்றி பெறுவது உறுதியாகும். பெரும்பான்மையை நிரூபித்த பிறகு நிதி மசோதா நிறைவேற்றப்பட உள்ளது. இதுகுறித்து எடியூரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

நம்பிக்கை தீர்மானம் மீது நாளை(அதாவது இன்று) சட்டசபையில் வாக்கெடுப்பு நடக்கிறது. அதற்கு முன்பு நிதி மசோதாவுக்கு ஒப்புதல் பெறப்படும். கூட்டணி அரசு கொண்டு வந்த நிதி மசோதாவுக்கு அப்படியே அனுமதி பெற முடிவு செய்துள்ளேன். அதில் ஒரு சிறிய மாற்றம் கூட நான் செய்யவில்லை. இந்த கூட்டத்தில் எனது அரசின் பெரும்பான்மையை 100 சதவீதம் நிரூபிப்பேன்’. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்