மனைவி பிரிந்த வேதனையில் பிச்சைக்காரராக மாறிய அரசு ஊழியர்; இளைஞர்கள் மீட்டனர்

மனைவி பிரிந்த வேதனையில் பிச்சைக்காரராக மாறிய அரசு ஊழியரை இளைஞர்கள் மீட்டனர்.

Update: 2019-07-28 23:15 GMT

ஈரோடு,

ஈரோடு பஸ் நிலையம் பகுதியில் ஒருவர் பிச்சை எடுத்து வந்தார். அவரை மீட்கும் நடவடிக்கையில் அட்சயம் அறக்கட்டளையை சேர்ந்த இளைஞர்கள் முடிவு செய்தனர். இதனால் அவரிடம் சென்று விசாரித்தனர். அப்போது அவர் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சிவக்குமார் (வயது 39) என்பதும், அவர் நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கருவூலத்தில் ஊழியராக வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து சிவக்குமாரை இளைஞர்கள் நேற்று முன்தினம் மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிகிச்சைக்கு பிறகு நேற்று அவர் ராசிபுரத்தில் உள்ள அணைக்கும் கரங்கள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்து அட்சயம் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் நவீன்குமார் கூறியதாவது:–

மீட்கப்பட்ட சிவக்குமாருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. அவருக்கு குழந்தை இல்லை. திருமணமான 3 ஆண்டுகளில் அவருடைய மனைவி பிரிந்து சென்று, வேறு திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. இதனால் சிவக்குமார் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானார். அவரால் அந்த துயரத்தில் இருந்து மீண்டு வரவே முடியவில்லை.

அதன்பிறகு மது குடிக்கும் பழக்கத்துக்கு ஆளாகினார். வாரிசு அடிப்படையில் கிடைத்த அரசு வேலையையும் அவரால் செய்ய முடியவில்லை. ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட இடங்களில் சுற்றி திரிந்து பிச்சை எடுத்து வாழ்ந்து வந்துள்ளார். இந்தநிலையில் ஈரோடு பஸ் நிலையத்தில் அவரை மீட்டு உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல் ஈரோடு மாவட்டம் வெள்ளோடு பகுதியில் சுற்றி திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட கார்த்திக் (30) என்பவரை அட்சயம் அறக்கட்டளை உறுப்பினர்கள் நேற்று காலை மீட்டனர். அவரை குளிப்பாட்டி புதிய துணிகள் வாங்கி கொடுத்து அணிவித்தனர். அப்போது அவர்களுடன் கார்த்திக் ஒத்துழைக்கவில்லை. அவர் கடித்ததில் இளைஞர்கள் 2 பேர் காயம் அடைந்தனர். இருந்தாலும், பொதுமக்கள் உதவியுடன் கார்த்திக்கை அவர்கள் மீட்டு ராசிபுரம் அணைக்கும் கரங்கள் காப்பகத்தில் சேர்த்தனர்.

மேலும் செய்திகள்