கத்தியால் வெட்டி நகை பறித்த கொள்ளையனுடன் போராடிய பெண்

பெண்ணை கத்தியால் வெட்டி நகை பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையனை, பொதுமக்கள் மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

Update: 2019-07-28 22:30 GMT
பூந்தமல்லி,

பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கம், இந்திரா நகரை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 55). இவருடைய மனைவி தனலட்சுமி (46). சினிமாத்துறையில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு தனலட்சுமி, வீட்டின் அருகில் உள்ள கடைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.

அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் முகவரி கேட்பதுபோல் நடித்து திடீரென தனலட்சுமி கழுத்தில் கிடந்த 5 பவுன் தாலி சங்கிலியை பறித்தார். அதில் 2 துண்டான சங்கிலியின் ஒரு பகுதி கொள்ளையன் கையில் சிக்கியது. மற்றொரு பகுதி தரையில் விழுந்தது.

அதிர்ச்சி அடைந்த தனலட்சுமி, தரையில் விழுந்த சங்கிலியின் ஒரு பகுதியை எடுத்துவிட்டார். உடனே கொள்ளையன் தன்னிடம் இருந்த கத்தியை காட்டி மிரட்டி தனலட்சுமியிடம் இருந்த மீதி சங்கிலியையும் கேட்டு மிரட்டினான்.

ஆனால் அவர் தரமறுத்ததால் கத்தியால் தனலட்சுமியின் கையில் வெட்டினான். இதில் தனலட்சுமியின் கையில் பலத்த வெட்டு விழுந்ததால் ரத்தம் கொட்டியது. எனினும் அவர், கொள்ளையனை தப்பிக்க விடாமல் அவனது கையை பிடித்துக்கொண்டு போராடினார்.

இதை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் ஓடிவந்து கொள்ளையனை மடக்கிப்பிடித்து தர்மஅடி கொடுத்து பூந்தமல்லி போலீசில் ஒப்படைத்தனர். பிடிபட்ட கொள்ளையனிடம் இன்ஸ்பெக்டர் பாரதி விசாரணை நடத்தினார்.

அதில் அவர், அய்யப்பன்தாங்கலை சேர்ந்த சிவ குமார்(40) என்பது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து கத்தி, மிளகாய் பொடி, மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

கொள்ளையன் கத்தியால் வெட்டியதில் படுகாயம் அடைந்த தனலட்சுமி அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். அவருக்கு கையில் 5 தையல் போடப்பட்டது.

மேலும் செய்திகள்