நாகர்கோவில்-மும்பை எக்ஸ்பிரஸ் ரெயில் தவுண்ட் ரெயில் நிலையத்தில் நிறுத்தம்; பயணிகள் அவதி
கனமழை எதிரொலியாக நாகர்கோவில்-மும்பை எக்ஸ்பிரஸ் ரெயில் தவுண்ட் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர்.
மும்பை,
நாகர்கோவிலில் இருந்து நேற்று முன்தினம் மும்பை நோக்கி நாகர்கோவில்-மும்பை எக்ஸ்பிரஸ் வந்து கொண்டிருந்தது. நேற்று தானே மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக வாங்கினி-பத்லாப்பூர் இடையே மகாலட்சுமி எக்ஸ்பிரஸ் வெள்ளத்தில் சிக்கியது. இதன் காரணமாக மும்பை நோக்கி வரும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு இருந்தன.
இந்தநிலையில் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் புனேயை அடுத்த ரெயில் நிலையமான தவுண்ட் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. வெகுநேரமாகியும் அங்கு இருந்து ரெயில் புறப்படவில்லை. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர்.
இதுபற்றி அந்த ரெயிலில் பயணம் செய்த பயணி ஒருவர் கூறுகையில், ‘ரெயில் வெகுநேரமாக நிற்பதற்கான காரணம் குறித்து எந்தவொரு அறிவிப்பையும் ரெயில்வே தெரிவிக்கவில்லை. மேலும் நான் உள்பட சுமார் 1,000 பயணிகள் குடிநீர், உணவு இன்றி தவித்தோம். இது தொடர்பாக ரெயில்வே மேலாளரிடம் விளக்கம் கேட்ட போது அவர்கள் சரிவர பதில் தெரிவிக்கவில்லை’ என்றார்.
இதுதொடர்பாக மேலும் சில பயணிகள் ரெயில்வே மந்திரி பியூஷ் கோயலிடம் ஆன்லைன் மூலம் புகார் அளித்து இருப்பதாக தெரிவித்தனர்.