கள்ளக்காதல் விவகாரம்: அண்ணன் குழந்தைகளை கடத்தி சென்ற தொழிலாளி கைது

கள்ளக்காதல் விவகாரத்தில் அண்ணன் குழந்தைகளை கடத்தி சென்ற தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

Update: 2019-07-27 22:38 GMT
கோவை,

கள்ளக்காதல் விவகாரத்தில் அண்ணன் குழந்தைகளை கடத்தி சென்ற தொழிலாளி கைது செய்யப்பட்ட இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கோவை ரத்தினபுரி கலைஞர் கருணாநிதி நகரை சேர்ந்தவர் நந்தகுமார் (வயது 37). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி பிரியா (32). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. நந்தகுமாரின் தம்பி கார்த்திக் (24). கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணமாகவில்லை. இவர் அதே பகுதியில் தனது தாயுடன் வசித்து வருகிறார்.

கார்த்திக்கிற்கும், அவருடைய அண்ணன் மனைவி பிரியாவுக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்தது. இதனால் அவர்கள் அவ்வப்போது தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். நேற்று முன் தினம் கார்த்திக், பிரியாவை உறவுக்கு அழைத்ததாக தெரிகிறது. இதற்கு பிரியா மறுத்து உள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த கார்த்திக், பிரியாவின் 2 குழந்தைகளிடமும் நைசாக பேசி கடத்தி சென்றார். குழந்தைகளை காணாமல் பிரியா அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் தனது கணவர் நந்தகுமாரிடம் குழந்தைகள் காணாமல் போனது பற்றி கூறி அழுதுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் ரத்தினபுரி போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில், குழந்தைகளை கார்த்திக் கடத்தி சென்றதும், பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் தலைமறைவாக இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பிரியாவை கார்த்திக்கிடம் செல்போனில் சமாதானமாக பேச வைத்தனர். அதை நம்பி அவர் குழந்தைகளை அழைத்துக்கொண்டு வந்தார். அப்போது மறைந்து நின்ற போலீசார் கார்த்திக்கை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 குழந்தைகளையும் போலீசார் மீட்டனர்.

கள்ளக்காதலுக்காக அண்ணன் குழந்தைகளை தம்பியே கடத்திய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்