குலதெய்வ கோவிலில் எடியூரப்பா சாமி தரிசனம்; மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு

மண்டியா அருகே பூகனகெரே கிராமத்தில் உள்ள குல தெய்வ கோவிலில் முதல்–மந்திரி எடியூரப்பா நேற்று சாமி தரிசனம் செய்தார். முன்னதாக அவருக்கு மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Update: 2019-07-27 22:38 GMT

மண்டியா,

கர்நாடக முதல்–மந்திரியாக பா.ஜனதா மாநில தலைவரான எடியூரப்பா நேற்று முன்தினம் பதவி ஏற்றார். பதவி ஏற்றதும் நெசவாளர்களின் கடனை தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவிட்டார். அத்துடன் மத்திய அரசின் கிருஷ் சம்மான் திட்டத்துடன் சேர்த்து கர்நாடக விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என அறிவித்தார்.

இந்த நிலையில் எடியூரப்பா தான் பிறந்த ஊரான மண்டியா மாவட்டம் கே.ஆர்.பேட்டை தாலுகா பூகனகெரே கிராமத்திற்கு செல்ல முடிவு செய்தார். அதன்படி பெங்களூருவில் இருந்து நேற்று காலை ஹெலிகாப்டரில் எடியூரப்பா புறப்பட்டு பூகனகெரே கிராமத்திற்கு சென்றார். அங்கு அமைக்கப்பட்டிருந்த ஹெலிபேடு மைதானத்தில் அவரது ஹெலிகாப்டர் வந்திறங்கியது.

பின்னர் அவர் அங்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:–

எனது குலதெய்வத்தை தரிசனம் செய்ய வந்துள்ளேன். முதலில் எனது குலதெய்வ கோவிலுக்கு செல்கிறேன். பின்னர் மேல்கோட்டை சென்று அங்குள்ள செலுவநாராயணசாமி கோவிலில் தரிசனம் செய்ய உள்ளேன். அதன்பிறகு பெங்களூரு புறப்பட்டு செல்ல உள்ளேன்.

நான் முதல்–மந்திரியாக பதவி ஏற்றதும் எனது குலதெய்வத்தை வழிபடவும், நான் பிறந்த ஊருக்கு வர வேண்டும் என்றும் முடிவு செய்திருந்தேன். அதன்படி வந்துள்ளேன். இது எனது கடமையும் கூட. நான் பிறந்த ஊரை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். 29–ந்தேதி (திங்கட்கிழமை) சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிப்பேன். இதில் நம்பிக்கையுடன் உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதைதொடர்ந்து ஹெலிபேடு மைதானத்தில் இருந்து வெளியே வந்த அவருக்கு பூகனகெரே கிராமத்தினரும், பா.ஜனதாவினரும் மேளதாளம் முழங்க பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது பா.ஜனதா நிர்வாகிகள், பூகனகெரே கிராமத்தினர் பூச்செண்டுகள் கொடுத்தும், மாலை அணிவித்தும் எடியூரப்பாவை வரவேற்றனர்.

அந்த சமயத்தில் அங்கு கூடியிருந்தவர்கள் எடியூரப்பா வாழ்க... என கோ‌ஷங்கள் எழுப்பினர். எடியூரப்பாவுடன் அவரது மகனும், எம்.பி.யுமான ராகவேந்திரா உடன் இருந்தார். அங்கிருந்து எடியூரப்பா காரில் ஏறி தனது குலதெய்வ கோவிலான சித்தலிங்கேஸ்வரா கோவிலுக்கு சென்றார். அங்கு அவருக்கு கோவில் மடாதிபதிகள் மாலை மற்றும் சாலை அணிவித்து வரவேற்று கோவிலுக்குள் அழைத்துச் சென்றனர். அங்கு அவர் சிறப்பு பூஜை செய்து சாமி தரிசனம் செய்தார். சுமார் 5 நிமிடத்திற்கு பிறகு அவர் அங்கிருந்து புறப்பட்டு மேல்கோட்டைக்கு சென்றார்.

மேல்கோட்டையிலும் அவருக்கு பா.ஜனதாவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் அங்குள்ள பிரசித்தி பெற்ற செலுவநாராயணசாமி கோவிலுக்கு எடியூரப்பா சென்றார். அங்கும் அவர் சிறப்பு பூஜை செய்து வழிபட்டார். அதைதொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் எடியூரப்பா பெங்களூரு புறப்பட்டு சென்றார். இதையொட்டி பூகனகெரே, மேல்கோட்டையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்