மேல்மலையனூர் அருகே மின்வேலியில் சிக்கி தொழிலாளி பலி
மேல்மலையனூர் அருகே மின்வேலியில் சிக்கி தொழிலாளி பலியானார்.
மேல்மலையனூர்,
மேல்மலையனூர் அருகே உள்ள புதுமரக்கோணம் கிராமத்தை சேர்ந்தவர் காசி மகன் சங்கர் (வயது 55), தொழிலாளி. இவர் நேற்று காலை ஈசல் பிடிப்பதற்காக அதே பகுதியில் உள்ள வயல் வெளியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திருத்தணி(53) என்பவரது வயலில் காட்டுப்பன்றிக்காக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சங்கரின் கால் சிக்கியது.
இதில் மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட அவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுபற்றி அறிந்த அவரது குடும்பத்தினர் பதறியடித்துக் கொண்டு வந்து, சங்கரின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
இதற்கிடையே இதுகுறித்து தகவல் அறிந்த வளத்தி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பலியான சங்கரின் உடலை பார்வையிட்டு அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் வளத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.