கோயம்பேட்டில் ஆம்னி பஸ்கள் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

கோயம்பேட்டில் ஆம்னி பஸ்கள் தீப்பிடித்து எரிந்து நாசமாயின. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Update: 2019-07-27 22:31 GMT
பூந்தமல்லி,

சென்னை கோயம்பேடு மார்க்கெட் அருகே வெளியூர்களுக்கு செல்லும் தனியார் ஆம்னி பஸ்கள் நிறுத்தி வைப்பதற்கான இடம் உள்ளது. தினமும் இங்கு 300-க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இரவு நேரங்களில் பயணிகளை ஏற்றிக்கொண்டு வெளியூர்களுக்கு செல்வது வழக்கம்.

நேற்று மாலை வழக்கம்போல் அங்கு ஆம்னி பஸ்களை நிறுத்தி விட்டு அதன் டிரைவர்கள் மற்றும் கிளனர்கள் தூங்கி கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு பயன்படுத்தப்படாமல் நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு ஆம்னி பஸ்சின் பின்பகுதியில் இருந்து திடீரென தீப்பிடித்து எரிந்தது. காற்றின் வேகத்தில் தீ மளமளவென அருகில் நிறுத்தி இருந்த மேலும் 2 ஆம்னி பஸ்களுக்கும் பரவியது.

ஆம்னி பஸ்சில் தீப்பிடித்து எரிவதை கண்ட சக டிரைவர்கள் கூச்சலிட்டனர். உடனே தீப்பிடித்து எரிந்த ஒரு ஆம்னி பஸ்சை அதன் டிரைவர் அங்கிருந்து அகற்ற முயன்றார். ஆனால் அதற்குள் அந்த பஸ்சில் தீ மளமளவென பரவியதால் சற்று தூரம் தள்ளி வந்து நிறுத்திவிட்டு கீழே இறங்கி ஓடிவிட்டார். உடனடியாக அங்கிருந்த மற்ற ஆம்னி பஸ்களை அதன் டிரைவர்கள் அங்கிருந்து எடுத்து சென்றுவிட்டனர்.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கோயம்பேடு, கீழ்ப்பாக்கம், அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 4 தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஆம்னி பஸ்களில் கொழுந்துவிட்டு எரிந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

தீயணைப்பு வாகனங்களில் தண்ணீர் காலியானதால், தண்ணீர் லாரிகளை மறித்து அதில் இருந்த தண்ணீரை கொண்டும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேரம் போராடி ஆம்னி பஸ்களில் எரிந்த தீயை அணைத்தனர். எனினும் தீ விபத்தில் 3 ஆம்னி பஸ்களும் முற்றிலும் எரிந்து நாசமாயின.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் அண்ணாநகர் துணை கமிஷனர் முத்துசாமி தலைமையில் கோயம்பேடு போலீசார் தீ விபத்தில் எரிந்து நாசமான ஆம்னி பஸ்களை நேரில் ஆய்வு செய்தனர்.

மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து நீண்டநாட்களாக பயன்படுத்தப்படாமல் நிறுத்தி இருந்த ஆம்னி பஸ்சில் இருந்துதான் முதலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. எனவே அந்த பஸ்சில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது மர்ம நபர்கள் யாராவது அந்த பஸ்சை தீ வைத்து எரித்தனரா? என்ற கோணத்தில் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆராய்ந்து வருகின்றனர்.

மேலும் தடயவியல் துறை அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்