திருவள்ளூர் அருகே ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுத்து நிறுத்தக்கோரி மறியல்

திருவள்ளூர் அருகே ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுத்து நிறுத்தக்கோரி மறியல் போராட்டம் நடந்தது. மறியலில் ஈடுபட்டவர்கள் சாலையில் மரக்கிளைகளையும் மருத்துவ கழிவுகளையும் போட்டனர்.;

Update: 2019-07-27 22:15 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் மப்பேடு ஊராட்சிக்கு உட்பட்டது வெள்ளக்கால்வாய் பகுதி. இங்கு 10 ஏக்கர் பரப்பளவில் புத்தேரி உள்ளது. இந்த ஏரி நீர் மூலம் மப்பேடு, வெள்ளக்கால்வாய், பூவல்லிக்குப்பம், அழிஞ்சிவாக்கம் உள்பட 10 கிராம மக்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இந்த ஏரியில் மர்மநபர்கள் மருத்துவ கழிவுப்பொருட்களையும், தனியார் கம்பெனியின் கழிவு பொருட்களையும் அந்த ஏரியில் கொட்டிவிட்டு சென்றனர். இதில் அந்த ஏரியில் ஆங்காங்கே மருத்துவ கழிவுகள் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பொதுமக்கள் பயன்படுத்தும் குடிநீர் மாசு ஏற்பட்டு தொற்றுநோய் ஏற்படுகிறது.

அந்த ஏரி நீரை குடித்த 20 கால்நடைகளும் பரிதாபமாக இறந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த அந்த பகுதி மக்கள் புத்தேரியில் உள்ள மருத்துவ கழிவுகளை அகற்றி அதனை கொட்டியவர்கள் யார்? என கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து நீரின் தன்மையை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தனர். இருப்பினும் இது நாள் வரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நேற்று காலை 7 மணி அளவில் திடீரென திருவள்ளூரை அடுத்த வெள்ளக்கால்வாய் பகுதியில் சாலையின் குறுக்கே மரக்கிளைகளையும், மரக்கட்டைகளையும், ஏரியில் இருந்து கொண்டு வந்த மருத்துவ கழிவுகளையும் போட்டு 200-க்கும் மேற்பட்டவர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அந்த வழியாக வந்த வாகனங்கள் அனைத்தும் சாலையின் இருபுறமும் 3 கிலோமீட்டர் தொலைவுக்கு மேலாக ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து நின்றன. காலை நேரம் என்பதால் வேலைக்கு செல்பவர்கள், பணியாளர்கள் என பலதரப்பட்ட மக்களும் பெரிதும் அவதியுற்றனர்.

இது பற்றி தகவல் அறிந்ததும் திருவள்ளூர் தாசில்தார் சீனிவாசன், மண்டல துணை தாசில்தார் வெங்கடேஷ், திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கங்காதரன், சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன், கிராம நிர்வாக அலுவலர் விஸ்வநாதன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் ஏரியில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகளை அகற்றி தண்ணீரை ஆய்வுக்குட்படுத்துவதாகவும், ஏரியில் மருத்துவ கழிவுகளை கொட்டிய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததை தொடர்ந்து பொதுமக்கள் காலை 9½ மணியளவில் தங்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். மறியல் காரணமாக அந்த வழித்தடத்தில் 2½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்