மோட்டார் சைக்கிளில் சென்ற போது லாரி மோதல்: மினி பஸ் டிரைவர்- கண்டக்டர் பலி

இரணியல் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற போது லாரி மோதிய விபத்தில் மினி பஸ் டிரைவர், கண்டக்டர் பரிதாபமாக இறந்தனர்.

Update: 2019-07-27 23:00 GMT
இரணியல்,

குமரி மாவட்டம் இரணியல் அருகே சேனம்விளை பெத்தேல்புரத்தை சேர்ந்தவர் ஷெர்லின் ஷெல்லி (வயது 25). இவர் திங்கள்சந்தையில் ஒரு மினி பஸ்சில் டிரைவராக பணியாற்றி வந்தார். அதே பஸ்சில் தலக்குளம் ஆர்.சி. தெருவை சேர்ந்த ஜூலியஸ் விஜூ (27) என்பவர் கண்டக்டராக இருந்தார்.

இவர்கள் இருவரும் நேற்று மினி பஸ்சை திங்கள்சந்தையில் உள்ள ஒரு ஒர்க்‌ஷாப்பில் பழுது நீக்குவதற்காக நிறுத்திவிட்டு, உதிரிபாகம் வாங்குவதற்காக நாகர்கோவிலுக்கு சென்றனர். அங்கிருந்து பொருட்களை வாங்கிய பின்பு மீண்டும் மோட்டார் சைக்கிளில் திங்கள்சந்தை நோக்கி புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை ஷெர்லின் ஷெல்லி ஓட்டி சென்றார். பின்னால் ஜூலியஸ் விஜூ அமர்ந்திருந்தார்.

இரணியல் ஆமத்தான்பொத்தை என்ற இடத்தில் சென்ற போது எதிரே ஒரு டிப்பர் லாரி வந்தது. எதிர்பாராத விதமாக லாரியும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில், மோட்டார் சைக்கிளில் இருந்து இருவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். அப்போது ஷெர்லின் ஷெல்லி லாரியின் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ஜூலியஸ் விஜூ உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக்கொண்டிருந்தார். அவரை அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவரும் பரிதாபமாக இறந்தார். விபத்து நடந்ததும் லாரியை அங்கேயே நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடி விட்டார்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் இரணியல் இன்ஸ்பெக்டர் முத்துராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர் பலியான 2 பேருடைய உடல்கள் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரை தேடிவருகின்றனர்.

இறந்த ஷெர்லின் ஷெல்லிக்கு, அஜிதா என்ற மனைவியும், ஒரு வயதில் குழந்தையும் உள்ளனர். ஜூலியஸ் விஜூவுக்கு இன்னும் திருமணமாகவில்லை. இரணியல் அருகே லாரி மோதி 2 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்