நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை கணக்கில் வராத ரூ.50 ஆயிரம் சிக்கியது

நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் வராத ரூ.50 ஆயிரம் சிக்கியது.

Update: 2019-07-27 23:15 GMT
ஆரல்வாய்மொழி,

நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலகம் தோவாளை அருகே விசுவாசபுரம் பண்டாரபுரத்தில் உள்ளது. இங்கு நேற்று விடுமுறை தினம் ஆகும். ஆனால், ஓட்டுனர் உரிமம் வழங்குதல் போன்ற பணிகள் நிலுவையில் இருந்ததால், அந்த பணிகளை முடிப்பதற்காக மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தில்குமார் சிறப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.

இதற்கிடையே வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்சம் வாங்கப்படுவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ஏராளமான புகார் சென்றது.

திடீர் சோதனை

இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் துணை சூப்பிரண்டு மதியழகன், இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய 6 பேர் கொண்ட குழுவினர் நேற்று மதியம் 2.30 மணியளவில் திடீரென நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு சென்றனர். போலீசார் வருவதை அறிந்ததும் பணியில் இருந்த ஆய்வாளர் செந்தில்குமார் அவசர, அவசரமாக தனது காரை எடுத்து கொண்டு வெளியே புறப்பட தயாரானார். ஆனால், அவர் புறப்படுவதற்குள் போலீசார் அவரை மடக்கி பிடித்தனர். பின்னர் காரில் இருந்த பையை சோதனை செய்த போது கட்டுக்கட்டாக பணம் இருந்தன. தொடர்ந்து, பையுடன் அவரை அலுவலகத்திற்குள் உள்ளே அழைத்து சென்று சோதனை நடத்தப்பட்டது. மதியம் தொடங்கிய இந்த சோதனை மாலை 6 மணி வரை நீடித்தது. காரில் இருந்த பணம் குறித்து செந்தில்குமாரிடம் போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தினர். ஆனால் அதற்கு அவர் சரியான விளக்கம் அளிக்காமல் இருந்ததாக தெரிகிறது.

பணம் பறிமுதல்

தொடர்ந்து கணக்கில் வராத ரூ.49 ஆயிரத்து 600 ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், பல ஆவணங்கள் சிக்கியதாக தெரிகிறது. இதுதொடர்பாக செந்தில்குமார் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீரென சோதனை நடத்திய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்