அரசின் திட்டங்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் கலெக்டர் சந்தீப் நந்தூரி பேச்சு

அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.

Update: 2019-07-27 23:00 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான வங்கியாளர்கள் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். கூட்டத்தில் அவர் 2019-2020-ம் ஆண்டுக்கான கடன் திட்ட அறிக்கையினை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது;-

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஆண்டு (2018-2019) வேளாண்மை, சிறு, குறு தொழில்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்களுக்காக கடன் வழங்க ரூ.7 ஆயிரத்து 71 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இலக்கு எட்டியது ரூ.8 ஆயிரத்து 580 கோடி ஆகும். நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட அதிகமாக கடன் வழங்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திற்கு நடப்பு ஆண்டுக்கு (2019-2020) வேளாண்மை பணிகளுக்கும், சிறு, குறு தொழில்கள் தொடங்கவும், வீடுகள் கட்டுமான பணிகளுக்கும் மற்றும் கல்வி கடன்கள், சுயஉதவிக்குழு கடன்கள் உள்ளிட்ட பல்வேறு கடன் உதவிகள் வழங்கிட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் நிர்ணயிக்கப்பட்டுள்ள ரூ.9 ஆயிரத்து 654 கோடி இலக்கினை எய்திட அலுவலர்கள் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து பொதுமக்களிடையே தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

அதனைத்தொடர்ந்து மகளிர் திட்டம் மூலம் தேசிய நகர்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ், 7 சாலையோர வியாபாரிகளுக்கு தலா ரூ.20 ஆயிரம் கடன் உதவிகளை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி வழங்கினார். மேலும், ராஜாபுதுக்குடி ஊராட்சி அளவிலான கூட்டமைப்புக்கு ரூ.57 லட்சத்து 30 ஆயிரம் கடன் உதவிகளை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி வழங்கினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், இந்திய ரிசர்வ் வங்கி அலுவலர் முத்துசெல்வன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் யோகானந்த், மகளிர் திட்டம் திட்ட அலுவலர் ரேவதி, மாவட்ட நபார்டு வங்கி மேலாளர் விஜயபாண்டியன், மாவட்ட முன்னோடி வங்கி இணை மேலாளர் விஜயகுமார் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்