பரிசோதிக்காத ரத்தம் ஏற்றியதால் எச்.ஐ.வி. தொற்றுக்கு ஆளான சாத்தூர் பெண்ணின் குழந்தைக்கு நோய் பாதிப்பு இல்லை - மதுரை அரசு ஆஸ்பத்திரி டீன் தகவல்

பரிசோதிக்காத ரத்தம் ஏற்றியதால் எச்.ஐ.வி. தொற்றுக்கு ஆளான சாத்தூர் பெண்ணின் குழந்தைக்கு நோய் பாதிப்பு இல்லை என்று மதுரை அரசு ஆஸ்பத்திரி டீன் வனிதா தெரிவித்துள்ளார்.

Update: 2019-07-27 23:00 GMT

மதுரை,

விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த கர்ப்பிணிக்கு, சிவகாசி அரசு ரத்த வங்கியில் இருந்து எடுத்து வரப்பட்ட பரிசோதிக்காத ரத்தத்தை ஏற்றியதில் அவர் எச்.ஐ.வி. தொற்றுக்கு ஆளாகியது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து அந்த கர்ப்பிணி, மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவருக்கு கடந்த ஜனவரி மாதம் பெண் குழந்தை பிறந்தது.

தாய்க்கும், குழந்தைக்கும் தொடர்ந்து அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அந்த குழந்தைக்கு எச்.ஐ.வி. பாதிப்பு உள்ளதா? என்பதை அறிய ஏற்கனவே முதற்கட்ட ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. அந்த பரிசோதனையில், குழந்தைக்கு எச்.ஐ.வி. தொற்று இல்லை என்று தெரியவந்தது. பின்னர் அந்த பெண்ணும், குழந்தையும் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். டாக்டர்களின் ஆலோசனையின் பேரில் அந்த பெண் தொடர் சிகிச்சை எடுத்து வருகிறார்.

இந்த நிலையில், குழந்தை பிறந்து 6 மாதம் கழிந்த நிலையில் 2–வது கட்டமாக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அந்த குழந்தைக்கு மீண்டும் ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. அதில், அந்த குழந்தைக்கு எச்.ஐ.வி. தொற்று இல்லை என்று தெரியவந்துள்ளதாக ஆஸ்பத்திரி டீன் வனிதா மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறும் போது ‘‘பிறந்த குழந்தைக்கு 2–ம் கட்ட பரிசோதனை முடிவில் நோய் தொற்று இல்லை என்று தெரியவந்துள்ளது. அதை தொடர்ந்து 3–ம் கட்ட பரிசோதனை வருகிற ஜனவரி மாதம் நடத்தப்படும். தொடர்ந்து அந்த குழந்தைக்கும், தாய்க்கும் சிகிச்சை அளித்து வருகிறோம்’’ என்றார்.

மேலும் செய்திகள்