நகராட்சிக்கு சொந்தமான காலி இடத்தில் குழந்தைகள் பூங்கா அமைக்கப்படுமா?

அருப்புக்கோட்டையில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் பூங்கா அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

Update: 2019-07-27 22:30 GMT
அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டை நகராட்சி 30-வது வார்டு பகுதியான தெற்கு தெரு, தம்மாந்தெரு, வடுகர்கோட்டை பகுதியில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான 2 ஏக்கர் காலி இடம் உள்ளது. அதனை சுற்றி பட்டாபி ராமர் கோவில், அய்யப்பன் கோவில், மாரியம்மன் கோவில் உள்ளது.

பராமரிப்பின்றி கிடக்கும் இந்த இடத்தை பொதுமக்கள் திறந்த வெளி கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் சமூக விரோத கும்பல் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், சுகாதார கேடு ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர்.

இது குறித்து தம்மாந் தெருவை சேர்ந்தவர்கள் கூறியதாவது:-

நகராட்சிக்கு சொந்தமான இந்த இடம் எந்தவித பராமரிப்பின்றி கிடக்கிறது. குப்பைகளை கொட்டும் இடமாகவும், திறந்த வெளி கழிப்பிடமாகவும் பயன்படுத்தி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகின்றனர். மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் முகம் சுளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சுகாதார சீர்கேட்டால் கடந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டது.

அப்போது அதிகாரிகள் இந்த இடத்தை பார்வையிட்டு உடனடியாக சுகாதார பணிகளை மேற்கொள்ளவும், நகராட்சி இடத்தில் பூங்கா அமைக்க அதிகாரிகளிடம் அறிவுறுத்தினர். நகராட்சி நிர்வாகம் அதற்கான நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளவில்லை. இதனால் தினந்தோறும் சுகாதார சீர்கேட்டால் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது பற்றி பல முறை நகராட்சி அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். எனவே பூங்கா அமைத்திட மாவட்ட நிர்வாகம், நகராட்சி நிர்வாகத்தை அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு கூறினர்.

மேலும் செய்திகள்