வக்கீல்கள் போதிய ஆவணம் சமர்ப்பிக்க தவறுவதால் சிவில் வழக்குகள் தோல்வியடைகிறது - ஐகோர்ட்டு நீதிபதி ஹேமலதா பேச்சு

சிவில் வழக்குகளில் போதிய ஆவணங்களை வக்கீல்கள் சமர்ப்பிக்காததால் வழக்குகள் தோல்வியடைகின்றன என்று ஐகோர்ட்டு நீதிபதி ஹேமலதா கூறினார்.

Update: 2019-07-27 22:45 GMT
மானாமதுரை,

மானாமதுரையில் புதிய சார்பு நீதி மன்றம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட நீதிபதி கார்த்திகேயன் தலைமை தாங்கினார். கலெக்டர் ஜெயகாந்தன், போலீஸ் சூப்பிரண்டு ரோகித்நாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் ஐகோர்ட்டு நீதிபதி ஹேமலதா கலந்துகொண்டு புதிய சார்பு நீதிமன்றத்தை திறந்து வைத்து பேசியதாவது:-

அரசு அலுவலகங்கள் சரியாக செயல்படாத நேரத்தில் நீதிமன்றங்கள் தலையிட்டு அதை சரி செய்கின்றன. மானாமதுரையில் பல ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது சார்பு நீதிமன்றம் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் தங்களுடைய பிரச்சினைகளை இங்கேயே தீர்த்துக்கொள்ளலாம். இதற்கு முன்பு சிவகங்கை மாவட்ட முன்சீப் கோர்ட்டு நீதிபதியாக எனது தந்தை ஏற்கனவே பணியாற்றி உள்ளார். அந்த வகையில் சார்பு நீதிமன்றத்தை திறந்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

வக்கீல்கள் சிவில் வழக்குகளில் போதிய ஆவணங்களை சமர்ப்பிப்பதில்லை. இதனால் ஐகோர்ட்டில் வழக்குகள் வந்தாலும் அவை தோல்வியில் முடிகிறது. எனவே வக்கீல்கள் நம்மை நம்பி வரும் பொதுமக்களுக்கு நியாயம் கிடைக்க செய்வதற்கு சம்பந்தப்பட்ட சட்ட புத்தகங்களை முழுமையாக படித்து தெரிந்து கொண்டு அதன் பின்னர் நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த சார்பு நீதிமன்றத்தில் மானாமதுரை, இளையான்குடி, திருப்புவனம், திருப்பாச்சேத்தி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வழக்குகள் கையாளப்பட உள்ளன. தற்போது வாடகை கட்டிடத்தில் செயல்பட உள்ள சார்பு நீதிமன்றத்திற்கு விரைவில் சொந்த கட்டிடம் கட்டப்பட உள்ளது. இவ்வாறு அவர் பேசினார். விழாவில் ராஜகோபால், பார் கவுன்சில் தலைவர் முத்துராமலிங்கம், செயலாளர் குரு முருகானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்