ராமேசுவரத்தில் நினைவு தினம் அனுசரிப்பு: அப்துல்கலாம் நினைவிடத்தில் ஏராளமானோர் அஞ்சலி

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி ராமேசுவரத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் எராளமானவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

Update: 2019-07-27 23:30 GMT
ராமேசுவரம்,

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் 4-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி ராமேசுவரம் பேய்க்கரும்பு பகுதியில் அமைந்துள்ள மணிமண்டபத்தில் கலாம் நினைவிடத்தில் நேற்று ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

நேற்று காலை 9 மணி அளவில் கலாமின் மூத்த சகோதரர் முகமது முத்து மீரான் லெப்பை மரைக்காயர், அவருடைய மகன் ஜெய்னுலாபுதீன், மகள் நசீமா மரைக்காயர், பேரன்கள் சேக்தாவூது, சேக் சலீம் உள்பட குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர். ஆலிம்கள் அப்துல் ரகுமான், சகுபர் சாதிக் ஆகியோரது தலைமையில் சிறப்பு துஆ ஓதப்பட்டது. இதில் ராமேசுவரம் முஸ்லிம் ஜமாத் தலைவர் செய்யது அபுதாகீர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதனை தொடர்ந்து பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி துறை இயக்குனர் பாலமுருகன், பாதுகாப்பு துறை அதிகாரி கவுஸ் ஆகியோர் கலாம் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். வருவாய் கோட்டாட்சியர் சுமன், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை, தாசில்தார் அப்துல் ஜப்பார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். போலீஸ் டி.ஐ.ஜி. ருபேஸ்குமார் மீனா, போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர். அவர்களுடன் ராமேசுவரம் துணை சூப்பிரண்டு மகேஷ், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் வந்திருந்தனர்.

இதேபோல தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள், அரசியல் கட்சியினர் கலாமின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அவரது உருவச்சிலைக்கும் மலர் தூவினார்கள்.

இதையொட்டி தேனி கூடலூரை சேர்ந்த இளஞ்செழியன் என்ற வாலிபர் தர்பூசணியில் கலாமின் முகத்தை வடிவமைத்திருந்தார். அதன் முன்பாக நின்று பொதுமக்கள் செல்போன்களில் செல்பி எடுத்துக்கொண்டனர்.

அப்துல் கலாமின் நினைவு தினத்தையொட்டி அவரது மணிமண்டபம் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்