பழம்பெரும் கர்நாடக இசை பாடகி டி.கே.பட்டம்மாள் வாழ்க்கை வரலாறு புத்தகம் - இந்திய அணுசக்தி கழக முன்னாள் தலைவர் வெளியிட்டார்

ஊட்டியில், பழம்பெரும் கர்நாடக இசை பாடகி டி.கே.பட்டம்மாள் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை இந்திய அணுசக்தி கழக முன்னாள் தலைவர் எம்.ஆர்.சீனிவாசன் வெளியிட்டார்.

Update: 2019-07-27 23:30 GMT
ஊட்டி,

பழம்பெரும் கர்நாடக இசை பாடகி பத்மவிபூஷன் டி.கே.பட்டம்மாளின் வாழ்க்கை வரலாறு புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி ஊட்டி லாலி கிளப்பில் நேற்று காலை 11 மணிக்கு நடைபெற்றது. நிகழ்ச்சியில் இந்திய அணுசக்தி கழக முன்னாள் தலைவர் டாக்டர் எம்.ஆர்.சீனிவாசன் கலந்துகொண்டு புத்தகத்தை வெளியிட்டார். இதை நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பெற்று கொண்டார். அதன்பிறகு எம்.ஆர்.சீனிவாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள பிரச்சினைகள் சரி செய்யப்பட்டு உள்ளது. இங்கு 3, 4 அலகுகளில் மின்சார உற்பத்தி பணிகள் நடைபெற்று வருகிறது. 5, 6 அலகுகள் அமைக்கும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த பணிகள் நிறைவு அடைந்த உடன் 6 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படும். இதனால் நாட்டுக்கு தேவையான மின்சாரம் கிடைக்கும். தமிழகத்தில் அணுக்கழிவு மையம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இங்கு அணுக்கழிவுகள் பாதுகாப்பாக வைக்கப்படும். இதனால் எந்த பாதிப்புகளும் ஏற்படாது. இதனால் எந்தவித அச்சுறுத்தல்களும் இல்லை. ராஜஸ்தான், மத்தியபிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களில் பிரான்ஸ், அமெரிக்கா நாடுகளுடன் இணைந்து 10 அணுமின் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது.

இந்தியாவில் அணுமின் நிலையங்களை மூட வேண்டிய அவசியம் இல்லை. அணுமின் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. நிலவுக்கு இஸ்ரோ அனுப்பிய சந்திராயன் விண்கலம் நிலவின் தன்மை, அங்கு தண்ணீர் உள்ளதா? என பல்வேறு ஆய்வுகளை செய்து வருகிறது. இதன் மூலம் நம் நாட்டின் ஆராய்ச்சிக்கு தேவையான தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்