தீபாவளியை முன்னிட்டு ரூ.64 ஆயிரம் வசூல்: வணிகவரித்துறை ஊழியர்கள் 3 பேர் பணிநீக்கம் கூடுதல் முதன்மை செயலாளர் நடவடிக்கை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வணிகர்களிடம் ரூ.64 ஆயிரம் மாமூல் வசூலித்த வழக்கில் சிக்கிய வணிகவரித்துறை ஊழியர்கள் 3 பேரை பணிநீக்கம் செய்து கூடுதல் முதன்மை செயலாளர் சோமநாதன் உத்தரவிட்டு உள்ளார்.

Update: 2019-07-27 22:45 GMT
நாமக்கல், 

கடந்த 2013-ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வணிகவரித்துறை அலுவலகத்தில் வணிகர்களிடம் மாமூல் வசூலிக்கப்படுவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் 2013-ம் ஆண்டு நவம்பர் 1-ந் தேதி திருச்செங்கோடு வணிகவரித்துறை அலுவலகத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையின்போது கணக்கில் வராத ரூ.64 ஆயிரத்து 225-ஐ பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அங்கு வணிகவரித்துறை அலுவலராக பணியாற்றி வந்த விஸ்வலிங்கம், துணை வணிகவரித்துறை அலுவலராக பணியாற்றி வந்த சுதாகரன், ஆவண எழுத்தர் சேகர், அலுவலக உதவியாளர் சுப்பிரமணி ஆகிய 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.

இது தொடர்பான வழக்கு கோவை ஒழுங்கு நடவடிக்கை குழு தீர்ப்பாயத்தில் நடந்தது. இதில் 4 பேரும் வணிகர்களிடம் மாமூல் வசூல் செய்து இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தீர்ப்பாயம் சார்பில் அவர்கள் 4 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வணிகவரித்துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

இதை தொடர்ந்து வணிகவரித்துறை கூடுதல் முதன்மை செயலாளர் சோமநாதன், தற்போது வெவ்வேறு இடங்களில் பணிபுரிந்து வரும் துணை வணிகவரித்துறை அலுவலர் சுதாகரன், ஆவண எழுத்தர் சேகர், அலுவலக உதவியாளர் சுப்பிரமணி ஆகிய 3 பேரையும் பணிநீக்கம் செய்து உத்தரவிட்டு உள்ளார்.

இந்த வழக்கில் சிக்கிய வணிகவரித்துறை அலுவலர் விஸ்வலிங்கம் தற்போது ஓய்வுபெற்று விட்டார். எனவே அவரது ஓய்வூதியத்தில் 3-ல் ஒருபங்கு தொகையை 7 ஆண்டுகளுக்கு பிடித்தம் செய்ய உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

மேலும் செய்திகள்