உடுமலையில் 73 பேரின் பெருவிரல் ரேகையில் உருவான 112 அடி நீள தேசிய கொடி; உலக சாதனைக்காக பரிந்துரைக்கப்படுகிறது

உடுமலையில் உலக சாதனைக்காக 73 பேரின் வலதுகை பெருவிரல் ரேகையை துணியில் பதிவு செய்து 112 அடி நீள தேசிய கொடியை வடிவமைத்தனர். இது உலக சாதனைக்காக பரிந்துரைக்கப்படுகிறது.

Update: 2019-07-27 22:45 GMT

உடுமலை,

சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகள் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டை கவுரவிக்கும் வகையில் தேசிய அளவில் மருத்துவ உதவி, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான உதவி, காவல்துறை உதவி, தீயணைப்பு உதவி ஆகியவற்றிற்கான 112 அவசர கால சேவை எண் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த டாக்டர் அப்துல் கலாம் மக்கள் பாதுகாப்பு சேவை அறக்கட்டளை முடிவு செய்தது. இதற்காக வருகிற 73–வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 73 தன்னார்வலர்களால் 112 அடி நீள தேசிய கொடியை வடிவமைக்கும் நிகழ்ச்சி நேற்று உடுமலை நேதாஜி விளையாட்டு மைதானத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சி உலக சாதனைக்காக நடத்தப்பட்டது.

இதில் டேபிள்கள் வரிசையாக வைக்கப்பட்டு அதில் 112 அடி நீளம் 5 அடி அகலம் கொண்ட வெள்ளை துணி விரிக்கப்பட்டது. இந்த துணியின் எடை 5 கிலோ 430 கிராம் ஆகும்.

இந்த துணியின் இருபுறமும் தன்னார்வலர்கள் 73 பேர் நின்றனர். அவர்கள் தங்களது வலது கை பெருவிரல் ரேகையை பெயிண்ட்களில் நனைத்து எடுத்து அந்த வெள்ளை துணியில் பதிவு செய்தனர். இதற்காக ஆரஞ்சு கலர் பெயிண்ட் 8 லிட்டரும், பச்சை கலர் பெயிண்ட் 6 லிட்டரும், அசோக சக்கரம் வரைவதற்காக புளூ கலர் பெயிண்ட் 1 லிட்டரும் பயன்படுத்தப்பட்டது. ஆரஞ்சு கலர் பெயிண்டால் 2 லட்சத்து 12 ஆயிரத்து 540 முறையும், பச்சை கலர் பெயிண்டால் 2 லட்சத்து 56 ஆயிரத்து 40 முறையும், புளூ கலர் பெயிண்டால் 2 ஆயிரம் முறையும் பெருவிரல் ரேகையால் பதிவு செய்து மூவர்ண தேசிய கொடியை வடிவமைத்தனர். இதற்காக அவர்கள் எடுத்துக்கொண்ட நேரம் 26 நிமிடங்கள் 3 வினாடிகள் ஆகும். இந்த நிகழ்ச்சி உலக சாதனைக்காக பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பார்ப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல்கலாம் போன்று தோற்றமுடைய உடுமலையை சேர்ந்த எஸ்.சேக்மைதீன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

மேலும் செய்திகள்