ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டுகிறது சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

கொல்லிமலை அருகே உள்ள ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

Update: 2019-07-27 22:00 GMT
சேந்தமங்கலம்,

நாமக்கல் மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தலமாக கொல்லிமலை விளங்கி வருகிறது. இங்கு நாமக்கல் மாவட்டம் மட்டுமின்றி வெளி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து இயற்கை எழில் கொஞ்சும் இடங்களை கண்டுகளித்து செல்கின்றனர். கொல்லிமலை அரப்பளஸ்வரர் கோவில் அருகே ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி உள்ளது. மழை இல்லாததால் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் விழவில்லை. இதனால் அருவி தண்ணீர் இன்றி வறண்டு காட்சியளித்தது.

இதையடுத்து சுற்றுலா பயணிகள் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி பகுதிக்கு செல்ல வனத்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதனால் கொல்லிமலைக்கு சுற்றுலா வந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். கடந்த 2 நாட்களாக கொல்லிமலை, வலப்பூர்நாடு, சேலூர் நாடு பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால் வறண்டு இருந்த ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்ட தொடங்கி உள்ளது.

அருவிக்கு செல்லும் நீர்ப்பிடிப்பு பகுதியில் தண்ணீர் பாய்ந்து சென்று விழுகிறது. சுமார் 200 அடி உயரத்தில் இருந்து வெள்ளியை உருக்கிவிட்டது போல கொட்டும் தண்ணீரை காண்போர் மனதை பரவசப்படுத்தும் விதமாக உள்ளது. இதையடுத்து கொல்லிமலை வனத்துறையினர் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி பகுதிக்கு செல்ல விதிக்கப்பட்டுள்ள தடையை நேற்று முதல் வாபஸ் பெற்று அனுமதி வழங்கி உள்ளனர். இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து கொல்லிமலை வனச்சரகர் அறிவழகன் கூறுகையில், அருவியில் தண்ணீர் விழ தொடங்கி உள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் பாதுகாப்பான முறையில் அருவியில் குளிக்க வேண்டும். மேலும் அருவியில் தண்ணீர் விழுவதால் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றார்.

மேலும் செய்திகள்