கொள்ளையடிக்க வந்த திருடன் வாசலில் நின்ற மோட்டார்சைக்கிள்களில் பெட்ரோல் பிடித்துச் சென்றான்; கண்காணிப்பு கேமராவில் உருவம் பதிவானது

கொள்ளையடிக்க வந்த திருடன் வீட்டு வாசலில் நின்ற மோட்டார்சைக்கிள்களில் பெட்ரோல் பிடித்துச்சென்றான். இந்த காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.

Update: 2019-07-27 23:15 GMT

பெருந்துறை,

பெருந்துறை பெத்தாம்பாளையம் ரோட்டில், திருவேங்கிடம்பாளையம்புதூர் உள்ளது. இங்குள்ள பவர் ஹவுஸ் எதிரில் சில வீடுகள் வரிசையாக உள்ளன. இங்கு குடியிருப்பவர்கள் வீடுகளின் முன்பகுதியில் தங்களுடைய இருசக்கர வாகனங்களை நிறுத்தியிருப்பார்கள்.

அங்கு வசித்து வரும் ஒருவர் வழக்கம்போல் நேற்று காலை வாசலில் நிறுத்தியிருந்த தன்னுடைய மோட்டார்சைக்கிளை இயக்கினார். ஆனால் இயக்க முடியவில்லை. அப்போதுதான வண்டியில் பெட்ரோல் இல்லை என்பது தெரிந்தது. ஆனால் முந்தைய நாள் டேங்க்கில் நிறைய பெட்ரோலை தான் நிரப்பி இருந்ததாக கூறினார். இதேபோல் அருகே நின்றிருந்த மற்றொரு மோட்டார்சைக்கிளிலும் பெட்ரோல் இல்லாமல் இருந்தது. இதுபற்றி இருவரும் வீட்டின் உரிமையாளிடம் சென்று, யாரோ எங்களுடைய மோட்டார்சைக்கிளில் இருந்து பெட்ரோலை திருடி விட்டார்கள் என்று புகார் அளித்தார்கள்.

இதைத்தொடர்ந்து உரிமையாளர், வீட்டின் முன்பகுதியில் பொருத்தியிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்த்தார். அப்போது நேற்று முன்தினம் நள்ளிரவு 2 மர்ம நபர்கள் சம்பந்தப்பட்ட வீட்டு வாசலில் மோட்டார்சைக்கிளில் வந்து நிற்பது தெரிந்தது. பின்னர் அதில் ஒருவன் நோட்டமிடுவதும், மற்றொருவன் சுற்றுச்சுவரை எறி குதித்து வரிசையாக உள்ள வீடுகளை நோக்கி வந்ததும் பதிவாகி இருந்தது.

பின்னர் வீடுகளுக்குள் ஆட்கள் இருப்பதை அறிந்த கொள்ளையன் அங்கு கிடந்த ஒரு காலி தண்ணீர் பாட்டிலை எடுத்து, வாசலில் நின்றுகொண்டு இருந்த 2 மோட்டார்சைக்கிள்களில் இருந்த பெட்ரோலை பிடித்து நிரப்பிக்கொண்டு சென்றது தெரிந்தது. இந்த காட்சிகளை பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அனைத்து வீடுகளும் உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்ததால், ஆட்கள் அதிக அளவில் உள்ளனர். இங்கிருந்தால் சிக்கிவிடுவோம் என்று கொள்ளையன் சென்றுவிட்டான். இதுகுறித்து நேற்று காலை வீட்டின் உரிமையாளர் பெருந்துறை போலீசில் புகார் அளித்து, கண்காணிப்பு கேமராவில் சிக்கிய காட்சிகளையும் காட்டினார்.

அதைவைத்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்