வேலூரில் மு.க.ஸ்டாலின் நடந்து சென்று வாக்கு சேகரிப்பு பொதுமக்கள் ‘செல்பி’ எடுத்து மகிழ்ந்தனர்
வேலூர் பகுதிகளில் மு.க.ஸ்டாலின் நேற்று நடந்து சென்று வாக்கு சேகரித்தார். அப்போது பொதுமக்கள் பலர் அவருடன் ‘செல்பி’ எடுத்துக் கொண்டனர்.;
வேலூர்,
வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் வருகிற 5-ந் தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது. தி.மு.க. சார்பில் பொருளாளர் துரைமுருகனின் மகன் டி.எம்.கதிர்ஆனந்த் போட்டியிடுகிறார். அவருக்கு வாக்கு சேகரிக்க தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் இரவு வேலூர் வந்தார்.
வாக்கு சேகரிப்பின் முதல் நாளான நேற்று அதிகாலையிலேயே மு.க.ஸ்டாலின் நடைபயிற்சி மேற்கொண்டு பொதுமக்களை சந்தித்து பிரசாரம் செய்தார். சிகப்பு நிற டி-சர்ட், கருப்பு நிற பேண்ட் அணிந்தவாறு அண்ணாசாலை டோல்கேட் அருகே உள்ள உழவர்சந்தைக்கு சென்றார். அங்கு அவரின் வருகையை எதிர்பாராத பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். காய்கறி வாங்க வந்தவர்களிடம் பிரசாரம் செய்த அவர் அங்கு மோர் குடித்தார்.
பொதுமக்கள் பலர் மு.க.ஸ்டாலினுடன் ‘செல்பி’ எடுத்து மகிழ்ச்சி அடைந்தனர். மு.க.ஸ்டாலின் பொதுமக்கள் பலரிடம் கை குலுக்கி கதிர்ஆனந்துக்கு வாக்கு சேகரித்தார்.
பின்னர் அவர் திருமலை-திருப்பதி தேவஸ்தான தகவல் மையம் அருகே உள்ள ஒரு சாலையோரம் டீக்கடையில் டீ குடித்தார். அவருடன் பொருளாளர் துரைமுருகன், எம்.எல்.ஏ.க்கள் காந்தி, ஏ.பி.நந்தகுமார், கார்த்திகேயன், வேட்பாளர் கதிர்ஆனந்த் ஆகியோரும் டீ குடித்தனர்.
பின்னர் அவர் காரில் ஏறி வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ஓட்டலுக்கு சென்றார். அங்கு விரிஞ்சிபுரம் அருகே உள்ள நரசிங்கபுரத்தை சேர்ந்த அணைக்கட்டு ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் அண்ணாதுரை என்பவர் மரணமடைந்ததை கேள்விப்பட்ட அவர், ஓட்டலில் இருந்து நரசிங்கபுரம் சென்றார். அங்கு அண்ணாதுரையின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு பின்னர் மீண்டும் ஓட்டலுக்கு திரும்பினார்.
அதைத்தொடர்ந்து வெள்ளை சட்டை, வேட்டி அணிந்தவாறு கருகம்புத்தூர் ஹாஜ்புரா பகுதிக்கு சென்றார். அங்குள்ள மரத்தின் அடியில் அமர்ந்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். மேலும் அவர்களுடன் கலைந்துரையாடினார். பின்னர் கொணவட்டம் மேம்பாலம் பகுதியில் இருந்து நடந்து சென்றபடி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.
அப்போது அங்கு வந்த அரசு பஸ்சில் ஏறி, பயணிகளிடமும் வாக்கு சேகரித்தார். பின்னர், கொணவட்டம் அரசு ஆரம்பசுகாதார நிலையம் சென்று அங்கிருந்த நோயாளிகளிடம் நலம் விசாரித்தார். அப்போது அங்கு பணியில் இருந்த செவிலியர்கள் மு.க.ஸ்டாலினுடன் ‘செல்பி’ எடுத்துக் கொண்டனர்.
பின்னர் அவர் சாலையில் நடந்து சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். ஆட்டோ, மோட்டார்சைக்கிள், சைக்கிளில் சென்றவர்கள் மற்றும் நடந்து சென்றவர்களிடம் வாக்குசேகரித்தார். பின்னர் அவர் ஓட்டலுக்கு திரும்பினார். மு.க.ஸ்டாலின் பிரசாரத்தையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கட்சி பிரமுகர்கள் பலர் உடன் சென்றனர்.