பள்ளத்தில் ஆட்டோ கவிழ்ந்து கல்லூரி மாணவ-மாணவிகள் 6 பேர் படுகாயம்

பள்ளத்தில் ஆட்டோ கவிழ்ந்து கல்லூரி மாணவ-மாணவிகள் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2019-07-26 22:00 GMT
ஊட்டி,

ஊட்டி- கூடலூர் தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த பணியின் ஒரு பகுதியாக ஊட்டி ஹில்பங்க் பகுதியில் பாலம் அமைக்க தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் பள்ளம் தோண்டி வைத்து உள்ளனர். இந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் பார்மசி கல்லூரியில் படிக்கும் கன்னியாகுமரியை சேர்ந்த மாணவி ஜென்சி, விருதுநகரை சேர்ந்த திவ்யலட்சுமி, மதுரை கோரிப்பாளையத்தை சேர்ந்த சபீதா, கும்பகோணத்தை சேர்ந்த விஷ்ணுபிரியா, நெல்லையை சேர்ந்த ஜெயபிரியா, சந்தோஷ் ஆகிய 6 பேர் ஊட்டிக்கு சுற்றுலா வந்தனர். அவர்கள் அங்குள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கினர். நேற்று முன்தினம் அவர்கள் 6 பேரும் ஹில்பங்க் பகுதியில் ஒரு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர். ஆட்டோவை ரமேஷ் பாபு(வயது 25) என்பவர் ஓட்டினார். அப்போது மழை பெய்து கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் ஆட்டோ திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, அங்கு தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் தோண்டி வைத்திருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் ஆட்டோவில் பயணம் செய்த மாணவ-மாணவிகள் 6 பேரும் படுகாயம் அடைந்தனர்.

ஆட்டோ டிரைவர் லேசான காயம் அடைந்தார். அப்போது அந்த வழியாக சென்ற தனிப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வினோத்குமார் படுகாயம் அடைந்த மாணவ-மாணவிகளை மீட்டார். பின்னர் ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் அவர்கள் சிகிச்சைக்காக கொண்டு சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஊட்டி நகர மேற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் தோண்டி வைத்துள்ள பள்ளங்களில் பணிகளை உடனடியாக தொடங்கி விரைவாக முடிக்க வேண்டும். ஆனால் பணிகள் தொடங்காமல் உள்ளதால் பள்ளங்களில் வாகனங்கள் கவிழ்ந்து அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது என்றனர்.

மேலும் செய்திகள்