மும்பைக்கு குடிநீர் வழங்கும் மோடக் சாகர் ஏரி நிரம்பியது : மும்பைவாசிகள் மகிழ்ச்சி

துல்சி, தான்சா ஏரிகளை தொடர்ந்து மும்பைக்கு குடிநீர் வழங்கும் மோடக் சாகர் ஏரியும் நிரம்பியது. இதனால் மும்பைவாசிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.;

Update:2019-07-27 05:38 IST
மும்பை,

மும்பை பெருநகரத்துக்கு மோடக் சாகர், தான்சா, பட்சா, விகார், துல்சி, மேல் வைத்தர்ணா, மத்திய வைத்தர்ணா ஆகிய ஏரிகளில் இருந்து குடிநீர் கிடைக்கிறது. இந்த ஏரிகள் உள்ள இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கடந்த மாதத்தில் 5 சதவீதமாக இருந்த தண்ணீர் இருப்பு அதிரடியாக 50 சதவீதமாக உயர்ந்தது.

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக கடந்த 12-ந் தேதி துல்சி ஏரி நிரம்பியது. தான்சா மற்றும் மோடக்சாகர் ஏரி கள் நிரம்பும் தருவாயில் இருந்தன.

இவ்விரு ஏரிகள் உள்ள பகுதிகளில் இருந்து 75 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், சில நாட்கள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதன் காரணமாக நேற்று முன்தினம் தான்சா ஏரி நிரம்பியது.

இதை தொடர்ந்து நேற்று மாலை 5.20 மணியளவில் மோடக் சாகர் ஏரியும் நிரம்பியது. அந்த ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேறி கொண்டு இருக்கிறது. கடந்த ஆண்டு இந்த ஏரி ஜூலை 15-ந் தேதி நிரம்பி இருந்தது.

மோடக் சாகரில் இருந்து மும்பைக்கு 1 லட்சத்து 3 ஆயிரத்து 178 மில்லியன் லட்சம் லிட்டர் தண்ணீர் கிடைக்கிறது. தாமதமாக தொடங்கிய பருவமழையால் கலக்கத்தில் இருந்து மும்பை வாசிகளுக்கு 3 ஏரிகள் நிரம்பி இருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்