19,400 கி.மீ. தூரத்தை சைக்கிளில் சுற்றி மும்பை பெண் கின்னஸ் சாதனை

19,400 கி.மீ. தூரத்தை சைக்கிளில் சுற்றி மும்பை பெண் கின்னஸ் சாதனை படைத்து உள்ளார்.

Update: 2019-07-27 00:05 GMT
மும்பை,

காயங்கள் பல வீரர்களை விளையாட்டில் சாதிக்க விடாமல் தடுத்து இருக்கிறது. ஆனால் மும்பையை சேர்ந்த இந்த பெண் தனது காயங்களையே கின்னல் சாதனை படைப்பதற்கான படிக்கட்டாக மாற்றி உள்ளார்.

மும்பை சயான் பகுதியை சேர்ந்தவர் பாக்யஸ்ரீ (வயது28). மாரத்தான் ஓட்ட வீராங்கனை. மாரத்தான் ஓட்டத்தில் பல சாதனைகளை படைக்க வேண்டும் என்ற கனவுகளுடன் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தவர். இந்தநிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பயிற்சியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக இவருக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதையடுத்து ‘இனிமேல் ஓடவே கூடாது' என டாக்டர்கள் கூறியது மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்தது. எனினும் காலில் ஏற்பட்ட காயத்தால் அவரது மாரத்தான் ஓட்ட கனவை மட்டுமே கலைக்க முடிந்தது. வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற பாக்யஸ்ரீயின் உத்வேகத்தை தடுக்க முடியவில்லை.

டாக்டர் ஓடக்கூடாது என கூறிய பிறகு பாக்யஸ்ரீ சைக்கிள் பந்தயத்தில் ஆர்வம் செலுத்தினார். மேலும் சைக்கிளில் அதிக தூரம் சென்று சாதனை படைக்க வேண்டும் என விரும்பினார். இதையடுத்து அவர் பெங்களூருவை சேர்ந்த பவான் எம்.ஜே. என்பவருடன் சேர்ந்து தனது நீண்ட தூர சைக்கிள் பயணத்தை தொடங்கினார்.

2017-ம் ஆண்டு அக்டோபர் 2-ந் தேதி முதல் இந்த ஆண்டு(2019) ஏப்ரல் வரை நாடு முழுவதும் 19 ஆயிரத்து 400.83 கி.மீ. தூரத்தை சைக்கிளில் சென்று சாதனை படைத்தார். இவரின் இந்த சாதனை சமீபத்தில் கின்னஸ் சாதனையாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கான சான்றிதழ் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த சாதனை குறித்து பாக்யஸ்ரீ கூறியதாவது:-

என்னால் விளையாட்டு துறையை விட்டு எளிதில் செல்ல முடியவில்லை. டாக்டர் என்னை ஓடக்கூடாது என மட்டுமே சொல்லியிருந்தாரே தவிர சைக்கிள் ஓட்டக்கூடாது என சொல்லவில்லை. எனவே தான் நாட்டை சைக்கிளில் சுற்ற முடிவு செய் தேன். பல விளையாட்டு வீரர்கள் காயம் காரணமாக விளையாட்டை விட்டு வெளியேறுகின்றனர்.

என்னாலும் அதுபோன்று செல்லமுடியவில்லை. அது வாழ்க்கையின் முடிவல்ல. ஒருவேளை இந்த விபத்து நடைபெறவில்லை என்றால் நான் சைக்கிள் ஓட்டவே வந்திருக்கமாட்டேன். இந்த சாதனையை படைத்து இருக்க முடியாது. இதைதான் நான் எல்லோரிடமும் சொல்ல விரும்புகிறேன். காயங்களால் நமது வெற்றியை ஒருபோதும் தடுக்க முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்