ஆற்றங்கரையில் ரூ.35 லட்சம் செலவில் சமுதாயக்கூடம் கட்டப்படும் - கலெக்டர் தகவல்

ஆற்றங்கரையில் மீனவர்கள் நலன் கருதி ரூ.35 லட்சம் செலவில் சமுதாயக்கூடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் தெரிவித்தார்.

Update: 2019-07-26 23:27 GMT
பனைக்குளம்,

மண்டபம் யூனியன் ஆற்றங்கரை கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் தலைமையில் நடந்தது. இதில் ஆற்றங்கரை, அழகன் குளம், சேர்வைக்காரன் ஊருணி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து கலெக்டரிடம் மனுக்களை அளித்தனர். முன்னதாக ஆற்றங்கரை ஜமாத் தலைவர் சவுக்கர் வரவேற்று பேசினார். அதனை தொடர்ந்து பல்வேறு அரசு துறைகளின் சார்பில் 55 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.5 லட்சத்து 6 ஆயிரத்து 98 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

பின்னர் அவர் பேசியதாவது:- ஆற்றங்கரை பகுதி மக்கள் வழங்கிய 18 கோரிக்கைகளை நிறைவேற்ற அந்தந்த துறை வாரியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் ரூ.35 லட்சம் மதிப்பில் சமுதாயக்கூடம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இப்பகுதியில் பெருமளவில் தென்னை மற்றும் பனை மரங்கள் காணப்படுகின்றன. குறிப்பாக நமது மாவட்டத்தில் 8,300 எக்டேர் நிலப்பரப்பில் தென்னை விவசாயம் செய்யப்படுகிறது. தென்னை விவசாயத்தை மேம்படுத்த தேவையான எந்திரங்கள் பெற்றுத்தர உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

விவசாயிகளின் நலனை பாதுகாத்திடும் விதமாக 2016-17ம் நிதியாண்டிற்கு ரூ.528 கோடி இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளது. 2017-18ம் நிதியாண்டிற்கு ரூ.477 கோடி இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளது. தற்போது 2018-2019-ம் ஆண்டிற்கான இழப்பீட்டு தொகையினை காலம் தாழ்த்தாமல் உடனடியாக வழங்க வலியுறுத்தி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பனைத்தொழிலை மேம்படுத்த ரூ.40 லட்சம் மானியம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் மாவட்டத்தில் 237 கிலோ மீட்டர் கடல் பரப்பும், 180 கடலோர கிராமங்கள்உள்ளன. இவற்றில் பிரதானமாக மீன்பிடித்தொழில் செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு இந்த மாவட்டத்தில் 1 லட்சத்து ஆயிரம் டன் மீன்கள் பிடிக்கப்பட்டுள்ளன. இவை தமிழகத்தில் 5-ல் ஒரு பங்காகும். இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் சுமன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் முருகேசன், சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் (பொறுப்பு) கோபு, கால்நடைத்துறை இணை இயக்குனர் பன்னீர்செல்வம், வேளாண்மை துறை இணை இயக்குனர் சொர்ணலிங்கம், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் கேசவதாசன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் மாரியம்மாள், வேளாண்மை பொறியாளர் பாலாஜி, தாசில்தார் தமிழ்ச்செல்வி மற்றும் வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் உள்பட பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள், ஐக்கிய முஸ்லிம் ஜமாத்துக்கள் சபை செயலாளர் பகுருல் அமீன் மற்றும் சமுதாய பிரமுகர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்