4-வது முறையாக முதல்-மந்திரி : எடியூரப்பா கடந்து வந்த பாதை
பா.ஜனதாவில் பல்வேறு பதவியை வகித்துள்ள எடியூரப்பா 4-வது முறையாக நேற்று முதல்-மந்திரியாக பதவி ஏற்றுக்கொண்டார். அரசியலில் அவர் கடந்து வந்த பாதை விவரம் வருமாறு:-
பெங்களூரு,
கர்நாடக முதல்-மந்திரியாக எடியூரப்பா 4-வது முறையாக நேற்று பதவி ஏற்றார். அவர் மண்டியா மாவட்டம் கே.ஆர்.பேட்டை தாலுகாவில் உள்ள பூகனகெரே கிராமத்தில் சித்தலிங்கப்பா-புட்டதாயம்மா தம்பதிக்கு 1943-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27-ந் தேதி மகனாக பிறந்தார். அவருக்கு 76 வயதாகிறது. மண்டியாவில் பி.யூ.கல்லூரி படிப்பை முடித்த அவர் பெங்களூருவில் பி.ஏ. படித்துள்ளார். தனது 15-வது வயதில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் சேர்ந்தார். கர்நாடக அரசின் சமூக நலத்துறையில் கிளார்க் பணியில் சேர்ந்தார்.
சிறிது காலத்திலேயே அந்த பணியை ராஜினாமா செய்த அவர், ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளை பிரசாரம் செய்ய 1965-ம் ஆண்டு அவர் மண்டியாவில் இருந்து சிவமொக்கா மாவட்டம் சிகாரிபுராவுக்கு இடம் பெயர்ந்தார். அங்கு ஒரு தனியார் அரிசி ஆலையில் பணிக்கு சேர்ந்தார். 1967-ம் ஆண்டு மார்ச் 5-ந் தேதி, அந்த அரிசி ஆலை உரிமையாளரின் மகளான மைத்ரதேவி என்பவரை திருமணம் செய்தார்.
எடியூரப்பாவுக்கு பி.ஒய்.ராகவேந்திரா, பி.ஒய்.விஜயேந்திரா மற்றும் 3 மகள்கள் உள்ளனர். 1972-ம் ஆண்டு 29 வயதாக இருக்கும்போது சிகாரிபுரா தாலுகா ஜனசங்க தலைவராக நியமிக்கப்பட்டார். 1974-ம் ஆண்டு முதல் 1976-ம் ஆண்டு வரை மாவட்ட வீரசைவ கூட்டுறவு சங்க தலைவராக பணியாற்றினார். 1975-ம் ஆண்டு நெருக்கடி நிலை காலத்தில் எடியூரப்பா சிவமொக்கா மற்றும் பல்லாரி சிறையில் 45 நாட்கள் சிறைவாசம் அனுபவித்தார். 1976-ம் ஆண்டு சிகாரிபுரா டவுன் பஞ்சாயத்து கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1977-ம் ஆண்டு அவர் சிகாரிபுரா டவுன் பஞ்சாயத்து தலைவராக நியமிக்கப்பட்டார். அதே ஆண்டில் அவர் ஜனதா கட்சியின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். முதல் முறையாக 1983-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் சிகாரிபுரா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார்.
1985-ம் ஆண்டு சிவமொக்கா மாவட்ட பா.ஜனதா தலைவராகவும், 1988-ம் ஆண்டு முதல் 1991-ம் ஆண்டு வரை பா.ஜனதா மாநில தலைவராகவும் பணியாற்றினார். சிகாரிபுரா தொகுதியில் இருந்து 7 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 1998-ம் ஆண்டு முதல் 1999-ம் ஆண்டு வரை 2-வது முறையாக பா.ஜனதா மாநில தலைவராக பணியாற்றினார்.
1994-ம் ஆண்டு கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கப்பட்டார். 2000-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரை அவர் கர்நாடக மேல்-சபை உறுப்பினராகவும் பணியாற்றினார். பிறகு 2004-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை மீண்டும் சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக பணியாற்றினார். அதன் பிறகு 2006-ம் ஆண்டு பா.ஜனதா-ஜனதா தளம்(எஸ்) ஆட்சியில் துணை முதல்-மந்திரியாக நியமிக்கப்பட்ட அவர், 2007-ம் ஆண்டு செப்டம்பர் 12-ந் தேதி கர்நாடகத்தில் முதல் முறையாக 25-வது முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். அப்போது 7 நாட்கள் மட்டுமே பதவியில் இருந்த அவர், ராஜினாமா செய்தார்.
2008-ம் ஆண்டு மே மாதம் 30-ந் தேதி நடைபெற்ற சட்டசபை தேர்தலில் எடியூரப்பா சிகாரிபுரா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அந்த தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அப்போது அவர் 2-வது முறையாக முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். சுமார் 3 ஆண்டுகள் பதவி வகித்த பிறகு கனிம சுரங்க முறைகேடு புகார் எழுந்ததை அடுத்து பதவியை ராஜினாமா செய்தார்.
அதன் பிறகு கருத்து வேறுபாடு ஏற்பட்டதை பா.ஜனதாவை விட்டு விலகிய எடியூரப்பா, கர்நாடக ஜனதா கட்சி என்ற பெயரில் தனி கட்சியை தொடங்கினார். 2013-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட்ட எடியூரப்பாவின் கட்சி, சுமார் 10 சதவீத ஓட்டுகளே பெற்றது. ஒரு சில இடங்களில் மட்டும் வெற்றி பெற்றது. மக்களிடையே வரவேற்பு கிடைக்காததால், கர்நாடக ஜனதா கட்சியை பா.ஜனதாவுடன் இணைத்து மீண்டும் அக்கட்சியில் எடியூரப்பா சேர்ந்தார்.
2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் சிவமொக்கா தொகுதியில் போட்டியிட்ட எடியூரப்பா வெற்றி பெற்று எம்.பி.யானார். 2016-ம் ஆண்டு கர்நாடக பா.ஜனதா தலைவராக மீண்டும் நியமிக்கப்பட்டார். இதுவரை அவர் தலைவர் பதவியில் நீடிக்கிறார்.
2018-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இருப்பினும் 104 இடங்களில் வெற்றி பெற்ற பா.ஜனதாவை கவர்னர் ஆட்சி அமைக்க அழைப்புவிடுத்தார். அதன்படி 2018-ம் ஆண்டு மே மாதம் 3-வது முறையாக அவர் முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். ஆனால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் 3-வது நாளில் பதவியை ராஜினாமா செய்தார். நம்பிக்கை வாக்கெடுப்பில் கூட்டணி அரசு தோல்வி அடைந்ததை தொடர்ந்து அவர் 4-வது முறையாக நேற்று முதல்-மந்திரியாக பதவி ஏற்றுக்கொண்டார். அவர் கர்நாடகத்தின் 30-வது முதல்-மந்திரி என்ற பெயர் பெற்றுள்ளார்.