வாய்க்கால்களில் தண்ணீர் திறக்கும் தேதியை உடனடியாக அறிவிக்கவேண்டும் - வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை

கீழ்பவானி, தடப்பள்ளி-அரக்கன்கோட்டை வாய்க்கால்களில் தண்ணீர் திறக்கும் தேதியை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2019-07-26 23:30 GMT
ஈரோடு,

ஈரோடு மாவட்ட வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளிக்கிழமை நடந்து வருகிறது. அதன்படி இந்த மாதத்திற்கான கூட்டம் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தலைமை தாங்கினார்.

காலை 10 மணி முதல் 11.30 மணி வரை விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர். அதைத்தொடர்ந்து விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் பகுதியில் உள்ள குறைகள் குறித்து பேசினார்கள்.

கே.ஆர்.சுதந்திரராசு: கீழ்பவானி, தடப்பள்ளி -அரக்கன்கோட்டை ஆகிய வாய்க்கால்களில் தண்ணீர் திறக்கும் தேதியை உடனடியாக அறிவிக்க வேண்டும். வேளாண்மைத்துறை மூலம் ஒவ்வொரு பகுதியிலும் தண்ணீர் பரிசோதனை செய்து அதற்கேற்ப விவசாய பயிர்கள் செய்ய அறிவுறுத்த வேண்டும். மேலும் நொய்யல் ஆற்று நீரை பரிசோதனை செய்து அதற்கு ஏற்ற பயிர்கள் எது என்பதை தெரிவிக்க வேண்டும். பயிர்காப்பீடு செய்த விவசாயிகளுக்கு கடந்த 3 ஆண்டுகளாக கிடைக்காமல் உள்ள இழப்பீட்டு தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராமப்புறங்களில் சமீபகாலமாக கால்நடை திருட்டுகள் அதிகமாக உள்ளது. எனவே போலீசார் சிறப்பு குழு அமைத்து அதை தடுக்க வேண்டும்.

சுபி.தளபதி: பவானிசாகர் அணையில் தற்போது 60 அடி தண்ணீர் உள்ளது. கடந்த சில நாட்களாக தண்ணீர் வரத்து 3 ஆயிரம் கன அடியாக உள்ளது. கொடிவேரி பாசனத்துக்கு கடந்த ஏப்ரல் மாதம் 15-ந் தேதியும், காலிங்கராயன் பாசனத்துக்கு ஜூன் மாதம் 15-ந் தேதியும் தண்ணீர் திறக்கப்பட வேண்டும். ஆனால் இதுவரை தண்ணீர் திறக்கப்படவில்லை. அறிவிக்கப்பட்ட தேதியில் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடாமல் அனைத்து பாசனங்களுக்கும் மொத்தமாக ஆகஸ்டு மாதத்தில் தண்ணீர் விட்டால் ஆட்கள், இடுபொருள், உரம் பற்றாக்குறை ஏற்படும். இதனால் தண்ணீர் விட்டும் சாகுபடியை உரிய காலத்தில் தொடங்க முடியாத நிலை ஏற்படும். எனவே அதிகாரிகள் நீர் நிர்வாகத்தை முறையாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பவானிசாகர் அணையில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு குடிநீருக்காக தினமும் 1,000 கன அடி வீதம் 5 நாட்கள் தண்ணீர் திறக்கப்பட்டது. ஏற்கனவே 200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் கூடுதலாக 800 கன அடி திறக்க வேண்டிய அவசியம் என்ன? என்பதை பொதுப்பணித்துறை தெரிவிக்க வேண்டும்.

பவானி ஆற்றில் உள்ள 48 கூட்டுக்குடிநீர் திட்டங்களுக்கு 60 கன அடி தண்ணீர் போதுமானது. ஆனால் 1,000 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது ஆலைகளின் பயன்பாட்டுக்கு தான். பவானிசாகர் அணைக்கு கீழ் பவானி வரை பவானி ஆற்றில் இருந்து 42 ஆலைகளுக்கு தண்ணீர் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. குடிநீருக்காக தண்ணீர் திறக்கப்படும்போது ஆலைகள் தண்ணீரை எடுக்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டதா? என்பதையும் அதிகாரிகள் விளக்க வேண்டும்.

பவானிசாகர் பாசன பகுதிகளில் கொப்பு வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும். பாசன நிலங்களில் கட்டிடங்கள் கட்டப்படுவதால் விளை நிலங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்வது பாதிக்கப்படுகிறது. இதனை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வி.எம்.வேலாயுதம்: காலிங்கராயன் பாசனத்தில் மஞ்சள் சாகுபடிக்கு ஏற்ற பருவம் ஜூன் மாதம் ஆகும். ஆனால் ஜூலை மாதம் முடிந்த நிலையிலும் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு அணையில் 33 அடி இருந்தபோதே பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இப்போது 60 அடி உள்ள நிலையில் காலிங்கராயன் பாசனத்துக்கு தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காவிரி ஆற்றில் பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீர் காவிரி ஆற்றின் வடகரையான கொக்கராயன்பேட்டை பகுதியில் ராட்சத மின் மோட்டார் வைத்து ஆலைகள் தண்ணீர் உறிஞ்சி வருகிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காலிங்கராயன் பாசன நிலங்களை சிலர் விலைக்கு வாங்கி செங்கல் சூளைக்கு மண் எடுக்கின்றனர். இதனால் அருகில் உள்ள விளை நிலங்கள் பாதிப்படைகின்றன. இதனை தடுக்க வேண்டும்.

பி.குழந்தைவேலு: ஒரே தவணையில் கடனை தீர்க்கும் திட்டத்தில் கல்விக்கடனை செலுத்த முடியாத நிலை உள்ளதால், விவசாயிகளுக்கு மட்டும் கடன் தீர்வைக்கு 2 தவணைகளில் வாய்ப்பு அளிக்க வேண்டும்.

ரசாயன உரங்களுக்கு மானியம் வழங்கப்படுவதுபோல், இயற்கை உரங்களுக்கும் மானியம் வழங்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரி, குளங்களையும் தூர்வார வேண்டும். இவ்வாறு விவசாய சங்க பிரதிநிதிகள் பேசினார்கள்.

அதற்கு விளக்கம் அளித்து மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் பேசும்போது, ‘குடிமராமத்து உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் ஏரி, குளங்கள் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இதனை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறோம். தன்னார்வலர்கள் மூலம் சில நீர் நிலைகள் தூர்வாரப்பட்டு வருகிறது. விவசாயிகளும் இதில் தங்கள் பங்களிப்பை அளிக்க வேண்டும். பவானிசாகர் அணையில் இருந்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் 12-ந் தேதி பாசனத்துக்கு திறக்கப்பட்டபோது, ஏறத்தாழ 20 டி.எம்.சி. அளவுக்கு தண்ணீர் இருந்தது. ஆனால் தற்போது 7 டி.எம்.சி. அளவுக்கு தான் தண்ணீர் உள்ளது. தண்ணீர் வரத்தும் நிலையானதாக இல்லை. இப்போதுள்ள நிலையில் அணையில் உள்ள தண்ணீர் அரக்கன்கோட்டை பாசனத்துக்கு கூட போதுமானதாக இருக்காது. இதனால் பாசனத்துக்கு உடனடியாக தண்ணீர் திறக்க வாய்ப்பில்லை.

கொப்புவாய்க்கால் ஆக்கிரமிப்புகள் குறித்து தாசில்தார்களிடம் மனு அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். ஆயக்கட்டு பகுதிகள், ஆயக்கட்டு அல்லாத பகுதிகள் குறித்து விரைவில் ஆய்வு மேற்கொண்டு அடையாளம் காணப்படும். இதன் மூலம் ஆயக்கட்டு பகுதிகளில் கட்டிடம் கட்டுவது தடுக்கப்படும்’ என்றார்.

மேலும் செய்திகள்