அரசு ஊழியர் ரகசியமாக 2–வது திருமணம் செய்தால் குற்ற வழக்கில் நடவடிக்கை மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

முதல் திருமணத்தை மறைத்து ரகசியமாக 2–வது திருமணம் செய்யும் அரசு ஊழியர்கள் மீது குற்ற வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2019-07-26 23:03 GMT

மதுரை,

மதுரையைச் சேர்ந்த தேன்மொழி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–

எனது கணவர் போலீஸ்காரராக பணியில் சேர்ந்து, சப்–இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்றவர். எங்களுக்கு கடந்த 1982–ம் ஆண்டில் திருமணமானது. அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி முத்துலெட்சுமி என்ற மனைவியும், 3 குழந்தைகள் இருப்பதும் சில வருடங்களுக்கு பின்னர் தான் தெரியவந்தது.

இதுதொடர்பாக எங்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டது. பின்னர் என் கணவர் மீது உசிலம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தேன். இந்த பிரச்சினை மாவட்ட சமரச தீர்வு மையத்துக்கு சென்றது. அங்கு 2 குடும்பத்தையும் கவனித்துக்கொள்வதாக எனது கணவர் உறுதியளித்தார். இந்தநிலையில் அவர் 2011–ம் ஆண்டு இறந்துவிட்டார். இதனார் அவருக்கு பின்பு ஓய்வூதியம் உள்ளிட்ட பணப்பலன்கள் எனக்கு வழங்கப்படவில்லை. எனவே ஓய்வூதியம் மற்றும் பணப்பலன்களில் குறிப்பிட்ட பங்குத்தொகையை எனக்கும் வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் பிறப்பித்த உத்தரவு வருமாறு:–

இந்த வழக்கை விசாரித்ததன் மூலம், பொது சேவைப்பணிகளில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் பலர், இதுபோன்ற பிரச்சினைகளில் அதிக அளவு சிக்கி இருப்பது தெரியவருகிறது. ஆனால் இதுபோன்ற பிரச்சினைகள் பணியில் இருக்கும் போது தெரிவதில்லை. அவர்கள் இறந்தபின்பு அல்லது ஓய்வு பெற்ற பின்பு பணப்பலன்களை வழங்கக்கோரி வழக்கு தொடரும்போதுதான் வெளிவருகின்றன. 2 திருமணம் செய்து கொள்வது, நன்னடத்தை ஆகாது. இது சட்டப்படி குற்றமும் கூட. ஆனாலும் பல அதிகாரிகள், இதனை கருத்தில் கொள்ளாமல் ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணங்களை செய்து கொள்கின்றனர். காவல்துறையைச் சேர்ந்த ஒருவரின் 2–வது திருமணம் தொடர்பான பிரச்சினையை சமரச தீர்வு மையம் தீர்த்து வைத்தது அதிர்ச்சியாகவும், வேதனையாகவும் உள்ளது. இதுபோன்ற பிரச்சினைகள் வெளியில் வந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.

தமிழக அரசு ஓய்வூதிய விதிகளின்படி குடும்ப ஓய்வூதியத்தை தனது மனைவிக்கு வழங்க பரிந்துரைக்கலாம். ஒரு முறை பதிவு செய்தபின் மனைவி இறந்தால் தவிர வேறு காரணங்களுக்காக இதில் மாற்றம் செய்ய இயலாது. எனவே இந்த வழக்கை பொறுத்தவரை மனுதாரரின் கோரிக்கை மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

தமிழக நிர்வாகத்துறை செயலாளர், ஓய்வூதியத்திற்காக மனைவி பெயரை பரிந்துரைக்கும் ஆவணங்களை முறையாக ஆய்வு செய்ய வேண்டும் எனவும், ரகசியமாக 2–வது திருமணம் செய்தது தொடர்பான புகார்கள் எழுந்தால், துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதுடன், குற்ற வழக்குபதிவு செய்ய வேண்டும் என்ற வழிகாட்டுதல்களை உரிய அதிகாரிகள் பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்