கோரிக்கைகளை வலியுறுத்தி பல்கலைக்கழக மாணவர்கள் 2-வது நாளாக உண்ணாவிரதம்; போலீசாருடன் வாக்குவாதம்- பரபரப்பு

கோரிக்கைகளை வலியுறுத்தி பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று 2-வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை தொடர்ந்தால் கைது செய்வோம் என்று எச்சரித்த போலீசாருடன் மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.;

Update: 2019-07-26 23:15 GMT
காலாப்பட்டு,

புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் அனைத்து பாடப்பிரிவுகளிலும் புதுச்சேரி மாநில மாணவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், மாணவர்களுக்கு இலவச பஸ் வசதி செய்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மாணவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

இந்த கோரிக்கைகளுக்காக நேற்று முன்தினம் பல்கலைக்கழகத்தின் 2-வது நுழைவு வாயில் முன்பு திடீரென மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம் தொடங்கினார்கள். இ்தில் மாணவர் பேரவை துணைத் தலைவர் சோனிமா தலைமையில் 50-க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டனர்.

நேற்று முன்தினம் இரவு புதுச்சேரியில் பரவலாக மழை பெய்தது. கொட்டும் மழையிலும் மாணவர்கள் உண்ணாவிரதத்தை தொடர்ந்தனர். மாணவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டத்தை கைவிட அவர்கள் மறுத்துவிட்டனர்.

அதையடுத்து போராட்டத்தை தொடர்ந்தால் வழக்கு பதிவு செய்து கைது செய்வோம் என போலீசார் எச்சரித்ததாக கூறப்படுகிறது.

உடனே மாணவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எந்த உத்தரவாதமும் இல்லாமல் கைது செய்தால் மனித உரிமைகள் ஆணையத்திடம் புகார் செய்வோம் என்றும் பெண் போலீஸ் இல்லாமல் மாணவிகளை கைது செய்யக்கூடாது என்றும் கூறி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

நேற்றும் மாணவர்கள் 2-வது நாளாக தங்கள் உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்தனர். கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக பல்கலைக்கழக நிர்வாகம் உறுதி அளிக்கும்வரை போராட்டம் தொடரும் என்று மாணவர்கள் அறிவித்துள்ளனர்.

இதையொட்டி போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மேலும் செய்திகள்