பெருமாநல்லூர் அருகே டெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுவன் பலி - பொதுமக்கள் சாலை மறியல்

பெருமாநல்லூர் அருகே டெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுவன் பலியானான். முறையாக சுகாதார பணிகளை மேற்கொள்ளாததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2019-07-26 22:20 GMT
பெருமாநல்லூர்,

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே காளிபாளையம் ஊராட்சி, படையப்பா நகரை சேர்ந்தவர் நடேசன்(வயது 30). கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி மஞ்சு(26). இவர்களது மூத்த மகன் மகேஷ்(6). இளைய மகன் லோகேஷ்(4). இந்த நிலையில் கடந்த 12-ந்தேதி காய்ச்சலால் அவதிப்பட்ட லோகேஷை பெற்றோர் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பரிசோதனையில் சிறுவனுக்கு வைரஸ் காய்ச்சல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இருப்பினும் காய்ச்சல் சரியாகாத காரணத்தால் கடந்த 14-ந்தேதி மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் லோகேஷ் அனுமதிக்கப்பட்டான். அங்கு பரிசோதித்த போது டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதை தொடர்ந்து தனிவார்டில் சிறுவன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தான். இருப்பினும் கடந்த 24-ந்தேதி இரவு லோகேஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தான். மகன் இறந்ததை அறிந்து அவனது பெற்றோர் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. அதன்பின்னர் அவனது உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதையடுத்து அவனது உடல் படையப்பா நகர் கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

பின்னர் லோகேஷ் டெங்கு காய்ச்சலால் இறந்ததை அறிந்ததும் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்( பஞ்சாயத்து) சுப்பிரமணியம், திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் ஜெயந்தி, பெருமாநல்லூர் வட்டார மருத்துவ மேற்பார்வையாளர் வரதராஜன், வட்டார மருத்துவ அலுவலர்(பொறுப்பு) சுதாப்ரியா, வட்டார வளர்ச்சி அதிகாரி (ஊராட்சிகள்) கனகராஜ் ஆகியோர் படையப்பா நகர் பகுதிக்கு நேரில் சென்றனர். அங்கு சுகாதார பணிகள் முறையாக இருக்கிறதா? என ஆய்வு செய்தனர்.

இதற்கிடையே படையப்பா நகர் பகுதியில் சுகாதார பணிகள் முறையாக மேற்கொள்ளப்படாத காரணத்தால் தான் டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு சிறுவன் பலியாகி விட்டான் என கூறி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திருப்பூர்-ஊத்துக்குளிரோடு வாரணாசிபாளையம் பிரிவில் நேற்று மதியம் 1 மணி அளவில் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அந்த வழியாக வந்த வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன.

இது குறித்து தகவல் அறிந்ததும் திருமுருகன்பூண்டி போலீசார் மற்றும் காளிபாளையம் ஊராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது பொதுமக்கள் இப்பகுதியில் வினியோகிக்கப்படும் குடிநீர் கலங்கிய நிலையில் இருப்பதை வெளிப்படுத்தும் வகையில் பாட்டிலில் பிடித்து வைத்திருந்த கலங்கிய நீரை அதிகாரிகளிடம் காட்டினார்கள். குப்பை கூளங்கள் சரிவர சுத்தம் செய்யப்படுவதில்லை. சாக்கடை கழிவுநீர் கால்வாய்களும் சரிவர தூர்வாரப்படுவதில்லை என புகார் கூறினார்கள். இதையடுத்து அதிகாரிகள், நல்ல சுகாதாரமான குடிநீர் வழங்கவும், சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைத்து கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் மறியலை கைவிட்டு சென்றனர்.

இந்த மறியலால் அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. டெங்கு காய்ச்சல் பாதித்து சிறுவன் பலியானதை தொடர்ந்து படையப்பா நகர் பகுதியில் சிறப்பு மருத்துவ முகாமும் நடத்தப்பட்டது.

மேலும் செய்திகள்