பட்டா பெயர் மாற்றத்துக்கு, ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது

பட்டா பெயர் மாற்றத்துக்கு ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-07-26 22:15 GMT
குஜிலியம்பாறை,

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை தாலுகா கரிக்காலி கிராமம் வசவநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 40). கடந்த மாதம் இவர், அப்பகுதியில் விவசாய நிலம் வாங்கினார். அதனை பத்திரப்பதிவு செய்த பிறகு, தனது பெயரில் பட்டா மாற்றம் செய்ய சுப்பிரமணி முடிவு செய்தார்.

இதற்காக அவர், கரிக்காலி கிராம நிர்வாக அலுவலர் துரைராஜிடம் சென்றார். அப்போது, ரூ.12 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே பட்டா பெயர் மாற்றம் செய்து தர முடியும் என துரைராஜ் கூறினார். ஆனால் அவர் லஞ்சம் கொடுக்க விரும்பவில்லை. மேலும் துரைராஜை கையும், களவுமாக லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் பிடித்து கொடுக்க சுப்பிரமணி திட்டமிட்டார்.

அதன்படி கடந்த 12-ந்தேதி சுப்பிரமணி மீண்டும் கரிக்காலி கிராம நிர்வாக அலுவலர் துரைராஜை சந்தித்து பேசினார். அப்போது இறுதியாக ரூ.8 ஆயிரம் கொடுத்தால் மட்டுமே பட்டா மாறுதல் செய்ய முடியும் என கிராம நிர்வாக அலுவலர் கூறினார். இவ்வாறு கிராம நிர்வாக அலுவலர் கூறியதை சுப்பிரமணி தனது செல்போனில் பதிவு செய்தார்.

பின்னர் அவர், இது குறித்து திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் தெரிவித்தார். அதன்பேரில் ரசாயனம் தடவிய ரூ.8 ஆயிரத்தை சுப்பிரமணியிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கொடுத்து அனுப்பினர். அதனை நேற்று மதியம் குஜிலியம்பாறையில் உள்ள கரிக்காலி கிராம நிர்வாக அலுவலகத்துக்கு சுப்பிரமணி சென்று, கிராம நிர்வாக அலுவலர் துரைராஜிடம் கொடுத்தார்.

அப்போது அங்கு ஏற்கனவே மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், துரைராஜை கையும் களவுமாக பிடித்தனர். இதையடுத்து திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் துணை சூப்பிரண்டு நாகராஜன், இன்ஸ்பெக்டர் கீதா ஆகியோர் துரைராஜிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

சுமார் 4 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த விசாரணையின் முடிவில் கிராம நிர்வாக அலுவலர் துரைராஜ் கைது செய்யப்பட்டார். மேலும் கிராம நிர்வாக அலுவலகத்தில் இருந்த முக்கியமான ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்