மேகமலை வனப்பகுதியில், சிறுத்தையிடம் சிக்கி உயிர் பிழைத்த இரட்டை குழந்தைகள்
மேகமலை வனப்பகுதியில் சிறுத்தையிடம் சிக்கி இரட்டை குழந்தைகள் உயிர் தப்பினர்.;
சின்னமனூர்,
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வருசநாட்டை சேர்ந்தவர் அசோக்குமார். அவருடைய மனைவி திவ்யா. இவர்களுக்கு அக்சயா (5) என்ற மகளும், அஜய் (5) என்ற மகனும் உள்ளனர். இவர்கள் 2 பேரும் இரட்டையர்கள் ஆவர். மேகமலையில் உள்ள தனது பாட்டி ஜான்சிராணி வீட்டில் 2 பேரும் தங்கியிருந்து அங்குள்ள அரசு பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.
நேற்று காலையில் வீட்டின் முன்பு கோழிகள் கத்தும் சத்தம் கேட்டது. இதையடுத்து அக்சயாவும், அஜய்யும் வீட்டுக்கு வெளியே வந்து பார்த்தனர். அப்போது வீட்டின் முன்பு கோழிகளை சிறுத்தை தாக்கி கொண்டிருந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த குழந்தைகள் வீட்டுக்குள் ஓடினர். இருப்பினும் அவர்களை நோக்கி சிறுத்தை பாய்ந்தது. இதில் அக்சயாவுக்கும் முகத்திலும், அஜய்க்கு முதுகிலும் சிறுத்தையின் நகம் பட்டு காயம் ஏற்பட்டது.
இதற்கிடையே குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு ஜான்சிராணி ஓடி வந்தார். பின்னர் குழந்தைகளை சிறுத்தை தாக்க வருவதை பார்த்து சத்தம் போட்டார். இதனால் சிறுத்தை அங்கிருந்து வனப்பகுதிக்குள் தப்பியோடியது. ஜான்சிராணி தக்க சமயத்தில் வந்ததால் 2 குழந்தைகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இதையடுத்து காயம் அடைந்த 2 குழந்தைகளும், ஹைவேவிஸ் மலைப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்கு பிறகு குழந்தைகள் 2 பேரும் வீட்டுக்கு திரும்பினர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சின்னமனூர் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
சமீபகாலமாக மேகமலை, ஹைவேவிஸ் மலைப்பகுதியில் சுற்றித்திரியும் சிறுத்தைகள், ஆடு, மாடு, நாய்களை அவை அடித்து கொன்றுள்ளன. சிறுத்தை நடமாட்டத்தால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர். இதுகுறித்து வனத்துறையினரிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.
எனவே விபரீதம் ஏதும் ஏற்படுவதற்கு முன்பு சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.