நிலுவை கட்டணம் செலுத்தாத கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் 15 பேர் மீது வழக்கு
நிலுவை கட்டணம் செலுத்தாத ஆண்டிப்பட்டியை சேர்ந்த 15 கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆண்டிப்பட்டி,
தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் தேனியில் செயல்படும் அரசு கேபிள் டி.வி. அலுவலகத்தில் இருந்து வயர் மூலம் கேபிள் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. அரசு கேபிள் டி.வி. அனலாக் சேனல்களுக்கு அந்தந்த பகுதி கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் கட்டணம் செலுத்த வேண்டும்.
இந்தநிலையில் ஆண்டிப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் கட்டணங்களை செலுத்தாமல் ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி.யின் தேனி தனி தாசில்தார் நஜிமுன்னிசா சம்பந்தபட்ட கேபிள் டி.வி. ஆபரேட்டர்களுக்கு அனலாக் நிலுவை கட்டணங்களை செலுத்தும்படி பலமுறை வலியுறுத்தியுள்ளனர். இருப்பினும் ஆபரேட்டர்கள் கட்டணங்களை செலுத்தாமல் இழுத்தடித்து வந்துள்ளனர்.
இதனையடுத்து அரசு கேபிள் டி.வி. தனி தாசில்தார் நஜிமுன்னிசா, கேபிள் அனலாக் நிலுவை தொகையினை செலுத்தாத கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் மீது ஆண்டிப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் கேபிள் ஆபரேட்டர்கள், ஆண்டிப்பட்டி அருகே உள்ள சக்கம்பட்டியை சேர்ந்த போஸ், ராஜி, முருகேசன், ஆண்டிப்பட்டியை சேர்ந்த குமரேசன், முத்துராமன், நாகராஜ், ஜம்புலித்துரை சேர்ந்த கணேசன், முத்துக்கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த மணிகண்டன், சண்முகசுந்தரபுரத்தை சேர்ந்த சீதாராமன், கொண்டமநாயக்கன்பட்டியை சேர்ந்த முருகானந்தம், முதலக்கம்பட்டியை சேர்ந்த லட்சுமிபிரபா, முருகன், எஸ்.ரெங்கநாதபுரத்தை சேர்ந்த முருகன், டி.சுப்புலாபுரத்தை சேர்ந்த மாடசாமி, பெரியகுளம் அருகே உள்ள எண்டப்புளியை சேர்ந்தவர் தர்மராஜ் ஆகிய 15 பேர் மீது பணம் செலுத்தாமல் மோசடி செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.