பங்கு சந்தையில் முதலீடு செய்வதாக கூறி ரியல் எஸ்டேட் அதிபர் உள்பட 24 பேரிடம் ரூ.1½ கோடி மோசடி
பங்கு சந்தையில் முதலீடு செய்வதாக கூறி ரியல் எஸ்டேட் அதிபர் உள்பட 24 பேரிடம் ரூ.1½ கோடி மோசடி செய்ததாக போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.
திருச்சி,
திருச்சி ஜீயபுரம் ரோடு குழுமணியை சேர்ந்தவர் கே.பி.எம்.ராஜா (வயது 42). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி சபிதா. நேற்று மதியம் ராஜா தலைமையில் 24 பேர் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜை சந்தித்து மனு கொடுக்கச் சென்றனர். ராஜா கொடுத்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
எனக்கு உறையூர் தெலுங்கு செட்டித்தெருவில் வசித்த வந்த ஒருவருடன், நான் செய்யும் ரியல் எஸ்டேட் தொழில் மூலம் பழக்கம். அவர், முறைப்படி அனுமதி பெற்று, பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்யும் தொழில் செய்து வருவதாக தெரிவித்தார். எனது நிறுவனம் மூலம் பங்கு பரிவர்த்தனைகள் செய்தால், கிடைக்கும் லாப தொகையில் கமிஷன் கொடுத்தால் போதும் என ஆசைவார்த்தை கூறினார். அதை உண்மை என நம்பி நானும், என் மனைவியும் கடந்த மார்ச் மாதம் 19-ந் தேதி ரூ.7 லட்சம் கொடுத்தேன். அதற்கு ரசீதும் கொடுத்திருந்தார். பங்கு சான்று தருவதாகவும் கூறினார். மேலும் என்னைப்போல பலரிடம் பங்கு சந்தையில் முதலீடு செய்ய பணம் பெற்றதாக கூறி இருந்தார்.
இந்த நிலையில் முதல் மாதம் வந்த கமிஷன் தொகை பதிவு செலவுக்கு செலவழிந்து விட்டது எனவும், பதிவு முடிந்து பங்கு சான்று தருவதாக கூறினார். பலமுறை தொடர்பு கொண்டும் ஒவ்வொரு முறையும் வெவ்வேறு காரணங்களை சொல்லி தவிர்த்தார். பின்னர் அவர் பங்கு முதலீடு செய்ததாக சொன்ன நிறுவனம் குறித்து விசாரித்தேன். அப்போது அவர் சொன்ன பெயரில் எந்த பங்கு நிறுவனமும் இல்லை என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.
பின்னர் கடந்த 10-ந் தேதி அலுவலகத்திற்கு சென்று பார்த்தபோது, அதை மூடிவிட்டு தலைமறைவானது தெரியவந்தது. வீட்டிலும் ஆள் இல்லை. என்னைப்போல சுமார் 23 பேரிடம் பணம் பறித்து ரூ.1½ கோடிக்கு மேல் மோசடி செய்துள்ளார். எனவே, அவர் மீது சட்டநடவடிக்கை எடுத்து எங்கள் பணத்தை மீட்டுத்தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதுபோல் மற்றவர்களும் தனித்தனியாக புகார் மனு கொடுத்தனர்.