மூதாட்டி கொலை வழக்கு: கட்டிட தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை தூத்துக்குடி கோர்ட்டு தீர்ப்பு

மூதாட்டி கொலை வழக்கில் தொடர்புடைய கட்டிட தொழிலாளிக்கு தூத்துக்குடி கோர்ட்டு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.

Update: 2019-07-26 23:15 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள புதுமனையை சேர்ந்தவர் நாராயணன். இவரின் மனைவி தங்ககனி (வயது 65). நாராயணன் இறந்து விட்டார். இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் தங்ககனி கட்டுமான வேலைக்கு சென்று, வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் சிறுதொண்டநல்லூரை சேர்ந்த சக கட்டிட தொழிலாளர்களான செல்வராஜ் மகன் சதீஷ்குமார் (29), பால்ராஜ் மகன் இசக்கிராஜா (22), குமார் மகன் ராஜசெல்வம் (21) ஆகியோர் கடந்த 19.12.2015 அன்று மூதாட்டி வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தனர். அவர்கள் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை தலையணையை வைத்து அழுத்தி கொலை செய்தனர். பின்னர் அவர் அணிந்திருந்த தங்க நகைகளை திருடிச்சென்றனர்.

இதுகுறித்து ஏரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீஷ்குமார், இசக்கிராஜா, ராஜசெல்வம் ஆகியோரை கைது செய்தனர்.

இந்த வழக்கு தூத்துக்குடி முதலாவது அமர்வு கூடுதல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் தொடர்புடைய இசக்கிராஜா, ராஜசெல்வம் ஆகியோர் வெவ்வேறு பிரச்சினைகள் தொடர்பாக அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சிவஞானம் குற்றம் சாட்டப்பட்ட சதீஷ்குமாருக்கு கொலை செய்ததற்காக ஆயுள் தண்டனையும், நகைகளை திருடியதற்காக 5 ஆண்டு சிறையும், கூட்டுசதிக்காக ஆயுள் தண்டனையும், வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து குற்ற செயல்களில் ஈடுபட்டதற்காக 7 ஆண்டு சிறையும் விதித்து இந்த 4 தண்டனைகளையும் ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கினார். மேலும் இந்த குற்றங்களுக்காக ரூ.4 ஆயிரம் அபராதமும் அதனை கட்ட தவறினால் கூடுதலாக 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில் அரசு தரப்பு வக்கீல் சேகர் ஆஜரானார்.

மேலும் செய்திகள்