காவி வேட்டியை காண்பித்து எக்ஸ்பிரஸ் ரெயிலை நிறுத்திய ஜோதிடர் ரெயில்வே போலீசார் கைது செய்து விசாரணை
காவி வேட்டியை காண்பித்து எக்ஸ் பிரஸ் ரெயிலை நிறுத்திய ஜோதிடரை கரூர் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் விசாரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளியணை,
தூத்துக்குடியிலிருந்து புறப்பட்டு மைசூரை நோக்கி நேற்று முன்தினம் இரவு மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டிருந்தது. அப்போது திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே ரெயில்வே தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த நபர் ஒருவர், திடீரென தான் அணிந்திருந்த காவி வேட்டியை கழற்றி அந்த ரெயில் வரும் பாதையில் காண்பித்தார்.
இதைக்கண்ட என்ஜின் டிரைவர் ஏதோ ஆபத்தினை தடுக்க இதுபோல செய்கிறார் என நினைத்து ரெயிலை நிறுத்தினார். பின்னர் காவி வேட்டியை காண்பித்த நபரிடம் விசாரித்தபோது அவர் சரிவர பதில் கூறவில்லை. இதைத்தொடர்ந்து அதே ரெயிலில் அவரை ஏற்றி கொண்டு, கரூர் மாவட்டம் வெள்ளியணை ரெயில் நிலையத்தில் அவரை இறக்கி விட்டு அவரை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
அதன் பின்னர் அதிகாரிகள் அளித்த தகவலின்பேரில், கரூர் ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த நபரிடம் விசாரித்தனர். அப்போது அந்த நபர், திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த ஜோதிடர் வன்னிகுமார் (வயது 50) என்பதும், வத்தலக்குண்டுவில் உள்ள ஒரு கோவில் அருகே தங்கியிருந்த அவரை, நண்பர் ஒருவர் அழைத்ததன் பேரில் எரியோடு குளத்தூர் பகுதிக்கு சென்றார்.
அப்போது அங்கு நின்ற மர்ம நபர்கள் சிலர் வன்னிகுமாரை தாக்கி அவரது கார், செல்போன், தங்க நகை ஆகியவற்றை பறித்துவிட்டு விரட்டினர். இதனால் உயிருக்கு பயந்து ஓடிய அவர் செய்வதறியாமல் காவி வேட்டியை கழற்றி எரியோடு அருகே ரெயிலை நிறுத்தியது விசாரணையில் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து ரெயில்வே விதிகளை மீறியது உள்ளிட்ட பிரிவுகளில் கரூர் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் வழக்குப்பதிவு செய்து வன்னிகுமாரை கைது செய்து, ஜாமீனில் விடுவித்தனர். மேலும் வன்னிகுமார் கூறிய குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிப்பதற்காக எரியோடு போலீஸ் நிலைய போலீசாருக்கு, கரூர் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் தகவல் தெரிவித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காவி வேட்டியை காண்பித்து ரெயிலை ஜோதிடர் நிறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.