மாவட்டத்தில் பலத்த மழை: சேலம்-ஏற்காடு மலைப்பாதையில் ராட்சத மரம் விழுந்தது
சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக சேலம்-ஏற்காடு மலைப்பாதையில் ராட்சத மரம் விழுந்ததால், 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஏற்காடு,
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. பகலில் வெயில் அடித்தாலும் இரவில் மழை பெய்கிறது. இதனிடையே நேற்று முன்தினம் இரவு 8 மணி முதல் பல்வேறு இடங்களில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சேலம் நகரம், ஏற்காடு, சூரமங்கலம், அயோத்தியாப்பட்டணம், கன்னங்குறிச்சி, கொண்டலாம்பட்டி, ஆத்தூர் உள்பட பல இடங்களில் நள்ளிரவு வரை மழை பெய்ததால், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
ஒரு சில இடங்களில் 2 மணி நேரத்துக்கு மேல் பலத்த மழை நீடித்தது. மழையின் காரணமாக குளிர்ந்த காற்று வீசியது. மழையினால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனிடையே நேற்று பகலில் லேசான வெயில் அடித்தது. மேலும் மாலையில் கடும் மேக மூட்டமாக காணப்பட்டது.
இந்த நிலையில் நேற்று காலை 11.30 மணிக்கு சேலம்-ஏற்காடு மலைப்பாதையில் 10-வது கொண்டை ஊசி வளைவில் ஒரு ராட்சத மரம் ரோட்டின் குறுக்கே விழுந்தது. இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மலைப்பாதையில் இரு புறங்களிலும் செல்ல முடியாத அளவுக்கு வாகனங்கள் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு நீண்ட வரிசையில் காத்திருந்தன. இது பற்றி தகவல் அறிந்ததும் நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து சென்று மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மேலும் பொக்லைன் எந்திரம் மற்றும் மின்வாள் கொண்டும் மரத்தை வெட்டி அகற்றினார்கள்.
இதைத்தொடர்ந்து மதியம் 2.30 மணிக்கு மரம் அகற்றப்பட்டதை தொடர்ந்து போக்குவரத்து தொடங்கியது. மரம் விழுந்ததால் சேலம்-ஏற்காடு மலைப்பாதையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர்.
சேலம் மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பதிவான மழை அளவு விவரம் வருமாறு:-
சேலம்-18.9 மி.மீ., தம்மம்பட்டி-17.4 மி.மீ., ஏற்காடு-17.2 மி.மீ., பெத்தநாயக்கன்பாளையம்-9.2 மி.மீ., சங்ககிரி-9 மி.மீ., ஆத்தூர்-4.8 மி.மீ., எடப்பாடி-3.2 மி.மீ., காடையாம்பட்டி-2 மி.மீ., வாழப்பாடி மற்றும் ஆனைமடுவு-1 மி.மீ.,