விவசாய நிலங்கள் வழியாக பெட்ரோலிய குழாய்களை பதிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்
விவசாய நிலங்கள் வழியாக பெட்ரோலிய குழாய்களை பதிக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்று தர்மபுரியில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கைமனு அளித்தனர்.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ரகமத்துல்லாகான், உதவி கலெக்டர் சிவன்அருள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் மாக்கனூர், திருமல்வாடி, பனைகுளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் திரண்டு வந்து ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அதில் கோவை மாவட்டம் இருகூர் முதல் கர்நாடக மாநிலம் தேவனகுந்தி வரை விவசாய நிலங்கள் வழியாக பெட்ரோலிய பொருட்களை எடுத்து செல்வதற்கான குழாய் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினார்கள்.
இந்த கூட்டத்தில் விவசாயிகள் பேசுகையில், தர்மபுரி மாவட்டத்தில் இலவச விவசாய மின் இணைப்புக்காக பதிவு செய்துள்ள விவசாயிகளில் பல ஆண்டுகளாக காத்திருப்போருக்கு மின் இணைப்பு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தட்கல் முறையில் வழங்கப்படும் மின் இணைப்பை இதனுடன் தொடர்புபடுத்தி குழப்பக் கூடாது. மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல் அதிகரித்து உள்ளதால் பயிர்ச்சேதம் அதிகரித்து வருகிறது. எனவே படைப்புழு தாக்குதலுக்கு உரிய இழப்பீடு கிடைக்கவும், பயிர் காப்பீடு திட்டம் மூலம் நிவாரண உதவியை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தர்மபுரி மாவட்டத்தில் ஏரிகளில் தூர்வாரும் பணியை முழுமையாக முடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.
இந்த கூட்டத்தில் கலெக்டர் மலர்விழி பேசுகையில், தர்மபுரி மாவட்டத்தில் மழைநீரை சேகரிக்க ஜல் சக்தி அபியான் திட்டம் மூலம் விரைவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த திட்டம் மூலம் ஆறுகள், ஏரிகள், கால்வாய்களை தூர்வாரி பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குடிமராமத்து திட்டம் மூலம் தேர்வு செய்யப்பட்ட ஏரிகளை தூர்வாரி சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்து விவசாயிகளும் நிவாரணம் பெறும் வகையில் அரசுக்கு முன்மொழிவுகள் அனுப்ப மாவட்ட நிர்வாகம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். விவசாய நிலங்களில் பெட்ரோலிய கியாஸ் குழாய்களை பதிப்பதை தவிர்க்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்று பேசினார்.
இந்த கூட்டத்தில் வேளாண் இணை இயக்குனர் கைலாசபதி, துணை இயக்குனர் இளங்கோவன், தோட்டக்கலை துறை துணை இயக்குனர் சீனிவாசன், முன்னோடி வங்கி மேலாளர் கண்ணன், வேளாண் அறிவியல் நிலைய தலைவர் சண்முகம் மற்றும் அனைத்து துறைகளை சேர்ந்த அதிகாரிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.